உத்தரபிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் தீவிரம்: கங்கை, யமுனை நதியில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும் நிலையில், கங்கை, யமுனையில் கழிவுநீர் கலப்பதை தடுங்கள் என்று ஒன்றிய, மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் வரும் ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை பிரயாக்ராஜில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜக அரசு செய்து வருகிறது.

மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடுவார்கள் என்பதால், அவர்கள் கங்கை மற்றும் யமுனை நதியை தூய்மையாக வைத்திருக்கவும், அவர்கள் புனித நீராடுவதற்கான சூழலை ஏற்படுத்தவும், நதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

ஆனால் லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால், சுகாதாரம் குறித்த கேள்விகள் குறித்து தேசிய பசுமை தீர்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியில் வடிகால்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான குழுவினர் மேற்கண்ட புகாரை விசாரித்தனர்.

தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம், உத்தரபிரதேச அரசுக்கும், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘அடுத்தாண்டு தொடக்கத்தில் பிரயாக்ராஜில் கும்பமேளா நடப்பதால், கங்கை, யமுனை நதிகளில் குளிக்கவும், பொதுமக்கள் அந்த நீரை குடிக்கவும் பயன்படுத்தும் வகையில் உரிய முறையில் ஒன்றிய, மாநில அரசு பராமரிக்க வேண்டும். கும்பமேளா நடக்கும் காலக்கட்டத்தில் கழிவுநீர் உற்பத்தி 10% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கங்கை மற்றும் யமுனா நதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்காத வகையில் உறுதி செய்ய வேண்டும். கும்பமேளா 45 45 நாட்கள் நடக்கும் என்பதால், ஆற்றின் நீரை குடிநீராக பயன்படுத்தவும், குளியல் நீராக பயன்படுத்தும் வகையில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

The post உத்தரபிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் தீவிரம்: கங்கை, யமுனை நதியில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: