இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மன்மோகன் சிங்கின் குடும்பத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் முன்னாள் பிரதமரின் அந்தஸ்துக்கு ஏற்ப கவுரவிக்கப்படுவார் என்றும், அவருக்கு நினைவுச்சின்னம் கட்ட ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் கூறப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவுச்சின்னம் அமைந்திருக்கும் ராஜ்காட் அருகே உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலில் மன்மோகன் சிங்கின் நினைவுச்சின்னம் கட்டப்படும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நிகம் போத் காட் பகுதியில் நடத்தியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவரது நினைவுச்சின்னம் கட்டப்பட்ட இடத்தில் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு மற்றும் தகனம் ஏன் செய்யப்படவில்லை என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, குடியரசு தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளில் இருந்த வி.வி.ஐ.பி அரசியல்வாதிகளின் நினைவுச்சின்னங்கள் தொடர்பான விதிகளில் பெரியளவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சியின் போது, அதாவது கடந்த 2013 மே 16ம் தேதி இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகிய பதவிகளில் இருந்தவர்கள் மறைந்தால், அவரது நினைவிடமானது ராஜ்காட் அருகே இல்லாமல், ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலில் அமைக்கப்படும்.
இதனுடன் கியானி ஜைல் சிங்கின் சமாதிக்கு அருகில் தேசிய நினைவுச்சின்னம் கட்டுவதற்கான திட்டமும் நிறைவேற்றப்பட்டது. இந்த இடம் ராஜ்காட்டிலிருந்து 1.6 கி. மீ. தொலைவில் உள்ளது. மகாத்மா காந்தியின் அடக்கம் செய்யப்பட்ட இடமான ராஜ்காட் பகுதியில் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களின் சமாதிகள் 245 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்மொழிவை கொண்டு வந்தது. எனவே, ராஜ்கோட் அருகே உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தாலில் விவிஐபிக்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மேற்கண்ட முடிவுக்கு முன்பு, அனைத்து வி.வி.ஐ.பி தலைவர்களின் சமாதிகளும் ராஜ்காட் அருகே கட்டப்பட்டன என்பன குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வருவது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா கூறுகையில், ‘நேரு குடும்பத்தின் வழிவந்தவர்கள், தங்களது சொந்த குடும்பத்தைத் தவிர நாட்டின் பிற பெரிய தலைவர்களையும் மதித்ததில்லை. அவர்களுக்காகன நீதியையும் வழங்கவில்லை. அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. அவமதிக்கப்பட்ட தலைவர்களின் பட்டியலில் பாபாசாகேப் அம்பேத்கர், முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பாபு, லால் பகதூர் சாஸ்திரி, சர்தார் வல்லபாய் படேல், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற தலைவர்களை கூறமுடியும்’ என்றார்.
The post காங்கிரஸ் – ஒன்றிய பாஜக அரசு இடையே கடும் மோதல்; ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்?-ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.