ஜம்முவில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமான சேவை நிறுத்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் பள்ளத்தாக்கின் பிற சமவெளிப்பகுதிகளில் இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு தொடங்கியது. தெற்கு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு பதிவானது. ஸ்ரீநகரில் சுமார் 8 அங்குலம் அளவிற்கு பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.

இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. நவியுக் சுரங்கப்பாதையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பனிஹால்-பாரமுல்லா இடையேயான ரயில் பாதையில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மின்விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

* மசூதியில் சுற்றுலா பயணிகள் தஞ்சம்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சோனாமார்க் பகுதியில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது குண்ட் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கினார்கள். அவர்களது வாகனம் பனிப்பொழிவில் சிக்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் ஜாமீயா மசூதியினை திறந்துவிட்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர்.

The post ஜம்முவில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமான சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: