கழிவறை மேற்கூரைக்குள் நூதன முறையில் பதுக்கி வைத்து கன்னியாகுமரி ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பார்சல்களாக கிடந்தன


நாகர்கோவில்: வட மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கழிவறை மேற்கூரையில் நூதன முறையில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகாருக்கு தினசரி ரயில் (விவேக் எக்ஸ்பிரஸ்) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே அதிக தூரம், அதாவது சுமார் 4273 கி.மீ. பயணிக்கிறது. இந்த ரயில் கேரளா வழியாக தற்போது கன்னியாகுமரி வந்தடைகிறது. இந்த ரயிலை சென்னை வழியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு திப்ரூகாரில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின் ஊழியர்கள், ரயிலை சுத்தம் செய்யும் பணியின் இருந்தன. அப்போது பொது பெட்டியில் உள்ள ஒரு கழிவறையில் தூய்மை பணியில் இருந்த போது, அதன் மேற்கூரைக்குள் ஏதோ பார்சல் இருப்பதை ஊழியர்கள் கவனித்தனர். மேற்கூரையை சதுரமாக வெடடி எடுத்து, பார்சல்களை வைத்து தனியாக ஸ்குரூ வைத்து முறுக்கி இருந்தனர். பார்சல்கள் தெரிந்ததை தொடர்ந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் வந்தனர்.

பின்னர் மேற்கூரையை உடைத்து பார்த்த போது மொத்தம் 14 பார்சல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கைப்பற்றி சோதனை செய்த போது அவற்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 13 கிலோ கஞ்சா இருந்ததாக தெரிகிறது. இவற்றை கைப்பற்றி, நாகர்கோவிலில் உள்ள ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். திப்ரூகாரில் இருந்து ரயில் புறப்படுவதற்கு முன்பே, இவற்றை பதுக்கி வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதை கொண்டு வந்தவர்கள் யார்? என்பது தெரிய வில்லை. போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் இதை ஒப்படைத்தனர். இது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கழிவறை மேற்கூரைக்குள் நூதன முறையில் பதுக்கி வைத்து கன்னியாகுமரி ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பார்சல்களாக கிடந்தன appeared first on Dinakaran.

Related Stories: