வடகிழக்கு பருவமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக சென்னையில் 17,235 புகார்கள் பதிவு: 15 மண்டலங்களில் இருந்து மொத்தம் 37,371 புகார்கள்

மாதவரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக 17,235 புகார்கள் பெற்றப்பட்டுள்ளன. இதற்கு தீர்வுகாண கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கி, பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 34 சதவீதம் அதிகமாக பெய்தது முக்கிய காரணமாக ஆகும். சென்னையை பொறுத்தவரை இயல்பை விட மொத்தம் 25 சதவீதம் வரை மழை அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 33 கால்வாய்களில் 53.42 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 15 கால்வாய்களில் 107.06 கி.மீ. நீளத்திற்கு தூர்வாருதல் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நீர்த்தேக்கம் கண்காணிக்கப்பட்டது.

15 மண்டலங்களிலும் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றாற்போல் 5 எச்.பி.7.5 எச்.பி. 10 எச்.பி. 25 எச்.பி. 50 எச்.பி. திறன் கொண்ட 845 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. மாநகராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள 37 தாழ்வான பகுதிகளில் 100 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் பம்புகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 14 பகுதிகளில் மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.
விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட்டன. மேலும் மழைக்காலங்களில் விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்ட 6 மர அறுவை இயந்திரங்கள், கையினால் இயக்கப்படும் 264 மர அறுவை இயந்திரங்கள், 8 மின் மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

மழைக்காலங்களில் மாநகராட்சிப் பள்ளிகள், சமூக நலக் கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், 24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக மாநகராட்சியின் அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறை மூலம், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறும் வகையில் 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 உதவி எண், 15 இணைப்புகளுடன் அமைக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறை மூலம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து நேற்று முன்தினம் வரை, பொதுமக்களிடம் இருந்து 37,371 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அதில் தண்ணீர் தேங்கி நிற்பது மிகவும் பொதுவான புகாராக உள்ளது. இதில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவது மற்றும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து 17,235 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மழையின் போது தெருவிளக்குகள் பழுதடைவது குறித்து 12,053 புகார்களும், குப்பை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மொத்தம் 8,225 புகார்களும் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக 1913 அவசர கால எண் மூலம் தண்ணீர் தேக்குவது குறித்து 16,591 புகார்கள் பெறப்பட்டது. இதில், 644 புகார்கள் நிலுவையில் உள்ளது. தெருவிளக்குகள் பழுதானதாக மொத்தம் 11,891 புகார்கள் பெறப்பட்ட நிலையில் 162 புகார்கள் நிலுவையில் உள்ளது. அதேபோல் குப்பை அகற்றுவது தொடர்பான 7,800 புகார்கள் பெறப்பட்ட நிலையில் 357 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதாக மாநராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கொரட்டூர் பொதுமக்கள் கூறியதாவது: கொரட்டூரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துபெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொது சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதேபோல் டிஎன்எச்பி 12வது தெரு முதல் 72வது தெரு வரை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது மற்றும் தண்ணீர் தேங்குவது போன்ற பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குடிநீருடன் கழிவுநீர் கலப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. கழிவுநீர் செல்லும் பழைய பைப்லைன் பழுதடைந்துள்ளதால் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓட முக்கிய காரணமாக உள்ளது.

பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள சேதத்தால் சென்ட்ரல் அவென்யூ போன்ற முக்கிய சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் செல்கிறது. இதனால் மழையின் போது கழிவுநீருடன் வெள்ள நீர் வீடுகளுக்கு புகுந்து விடுகிறது. இவ்வாறாக தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வார்டுகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வார்டு 104ல் 2 சுத்திகரிப்பு நிலையங்கள், மண்டலம் 7 ல் உள்ள இமயம் காலனி உந்து நிலையத்தில் 5 மில்லி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மழையின் போது தெருவிளக்குகள் பழுதடைவது குறித்து 12,053 புகார்களும், குப்பை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மொத்தம் 8,225 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

The post வடகிழக்கு பருவமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக சென்னையில் 17,235 புகார்கள் பதிவு: 15 மண்டலங்களில் இருந்து மொத்தம் 37,371 புகார்கள் appeared first on Dinakaran.

Related Stories: