மெரினாவில் கடந்த 5 நாட்கள் நடந்த உணவு திருவிழாவில் 3.20 லட்சம் பேர் பங்கேற்பு: சுயஉதவி குழு பொருட்கள் ரூ.1.50 கோடிக்கு விற்பனை

சென்னை: மெரினாவில் கடந்த 5 நாட்கள் நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்துகொண்டு, ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ஆயத்த உணவுகளை வாங்கிச் சென்றுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20ம் தேதி சென்னை, மெரினா கடற்கரையில் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் ஆதரவுடன் வெற்றித் திருவிழாவாக நடந்த இந்த உணவு திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த 286 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 35 அரங்குகளும், உணவுத் தரச் சான்றிதழ் பெற்ற குழுக்களைச் சேர்ந்த 365 மகளிர் 520 வகையான ஆயத்த உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையிலும், கலப்படம் ஏதுமின்றியும் தயாரித்து, தகுந்த முறையில் கட்டுமானம் செய்து விற்பனை செய்திட 7 அரங்குகளும் மற்றும் 3 அரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 20ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் நடந்த உணவுத் திருவிழாவில் 3.20லட்சம் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டு, ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ஆயத்த உணவுகளை வாங்கிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மெரினாவில் கடந்த 5 நாட்கள் நடந்த உணவு திருவிழாவில் 3.20 லட்சம் பேர் பங்கேற்பு: சுயஉதவி குழு பொருட்கள் ரூ.1.50 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: