ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு என்னையும் அக்காவையும் அப்பா அடிக்கிறாரு… நடவடிக்கை எடுங்க… சேலம் கலெக்டரிடம் 10ம் வகுப்பு மாணவி கண்ணீர் மனு

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் பள்ளி சீருடையில் 15 வயதான 10ம் வகுப்பு மாணவி ஒருவர் வந்து, மனு கொடுக்க எங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது, தந்தை மீது கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்திருக்கிறேன் என்றார். உடனே மாணவியை போலீசார் உள்ளே அனுப்பி வைத்தனர். மாணவி, மனுவை அதிகாரிகளிடம் வழங்கினார். அதில், ‘‘சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த எனது அப்பா, மது குடித்துவிட்டு வந்து அசிங்கமாக பேசியபடி, எங்களை அடித்து துன்புறுத்துகிறார். எனவே, என் அப்பாவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறியிருந்தார்.

வெளியே வந்த மாணவி கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எங்க அப்பா எங்களை ஸ்கூலுக்கு போகக்கூடாதுனு சொல்லி அடிக்கிறார். அதனால், 11ம் வகுப்பு படித்து வந்த என் அக்கா ஸ்கூலுக்கு போறதை நிறுத்திவிட்டார். இப்ப என்னையும் மது குடித்துவிட்டு வந்து அடித்து, போகக்கூடாதுனு சொல்கிறார். நான் படிக்கனும். அவர் அடித்ததால், என் அம்மாவிற்கு 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்க 3 பேரையும் படிக்க வைக்க வேண்டும்,’’ என்றார்.  இப்புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் அதிகாரிகள் கூறி அனுப்பினர்.

 

The post ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு என்னையும் அக்காவையும் அப்பா அடிக்கிறாரு… நடவடிக்கை எடுங்க… சேலம் கலெக்டரிடம் 10ம் வகுப்பு மாணவி கண்ணீர் மனு appeared first on Dinakaran.

Related Stories: