அரியனூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் நியாய விலை கட்டிடம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

செய்யூர்: அரியனூர் ஊராட்சியில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலை கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் அரியனூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள நியாயவிலை கடையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். இந்த நியாயவிலை கடை கட்டிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். பழமையான கட்டிடம் என்பதால் இந்த கட்டிடத்தின் மேற்கூரை உட்பட்ட சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வந்தது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் விரிசல் வழியாக கட்டிடத்தினுள் கசிந்து கடைக்குள் வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வீணாகி வந்தன.

இது ஒருபுறமிருக்க கட்டிடத்தை சுற்றி பல பகுதியில் எலிகள் பொந்துகள் ஏற்படுத்தி அதன் வழியாக கடைக்குள் புகுந்து உணவு மூட்டைகளை சேதப்படுத்தி அசுத்தம் செய்து வந்தன. இதனால், பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கட்டிடம் சிதிலமடைந்து அபாயகரமான நிலையில் இருந்ததால், தற்போது, அருகில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான சமுதாய கூட கட்டிடம் மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் நடந்து வருகிறது. ஆனால், போதிய இட வசதி இல்லாததால் கடையில் உள்ள பணியாளர்கள் மற்றும் இங்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, பழுதடைந்துள்ள நியாயவிலை கடை கட்டிடத்தை இடித்துவிட்டு அதை பகுதியில் புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அரியனூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் நியாய விலை கட்டிடம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: