நல்ல காலம் பிறந்திருப்பதாக ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த ஜோதிடர் கைது

பூந்தமல்லி: வேளச்சேரி, கருமாரியம்மன் நகர் விரிவு, பவானி தெருவை சேர்ந்தவர் கவிதா (41). இவரது கணவர் மணிகண்டன். இருவரும் பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 2022ம் ஆண்டு, மே மாதம், ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியை சேர்ந்த ஜோதிடர் வெங்கட சுரேஷ் வீட்டிற்கு சென்றனர். அப்போது, ஜோதிடர் உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு, நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், என ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதை உண்மை என நம்பி என்ன தொழில் செய்தால் லாபம் வரும் என கேட்டுள்ளனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர், எனது நண்பர் ஒருவருக்கு 2020ம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு உரிமம் வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு தற்போது தொழிலில் நல்ல லாபம் கிடைக்கிறது. வசதியாக வாழ்கிறார். உங்களிடம் காலி இடம் இருந்தால் நீங்களும் பெட்ரோல் பங்க் தொடங்கலாம். அதற்கான உரிமம் நான் வாங்கி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து தங்களுக்கு திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் காலி இடம் இருப்பதாக கூறி உள்ளனர். அப்படி என்றால் நீங்களும் பெட்ரோல் பங்க் ஆரம்பித்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என பதிலளித்துள்ளார்.

இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் திருமுடிவாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது இவருடைய தந்தை, டெல்லியில் ‘ரா’ பிரிவில் பணிபுரிகிறார். அதனால் அவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் தெரியும். நீங்கள் ரூ.85 லட்சம் கொடுத்தால் உங்களுக்கும் பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசென்ஸ் வாங்கி தருவார், என கூறியுள்ளார். இதை நம்பிய கணவன், மனைவி இருவரும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ம் தேதிக்குள், முன்பணமாக ரூ.50 லட்சம் அனுப்பியுள்ளனர். ஆனால் பணம் கொடுத்து 2 வருடங்கள் ஆகியும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்று தராமல் இருவரும் ஏமாற்றி வந்தனர்.

மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டாலும் முறையான பதில் இல்லை, நேரில் சென்று கேட்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பணம் வாங்கிக் கொண்டு பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கித் தராமல் மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர் வெங்கட சுரேஷ் மற்றும் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார். இதுபற்றி அறிந்த இருவரும் தலைமறைவாகினர். தனிப்படையினர் கடந்த 11 மாதமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிடர் வெங்கட சுரஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post நல்ல காலம் பிறந்திருப்பதாக ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த ஜோதிடர் கைது appeared first on Dinakaran.

Related Stories: