காரைக்குடி: காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, தேவகோட்டை ரஸ்தா காந்தி நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (63). இவர், தனது மகன் ஜேம்ஸ் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். நேற்று மாலை ஜேம்ஸ் காரைக்குடியில் நடக்கும் பொருட்காட்சியைப் பார்வையிட தனது மனைவியுடன் சென்றார்.
இதனால், வீட்டில் கலைச்செல்வி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர் இரவு 7 மணியளவில் திடீரென வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு மூதாட்டியிடம் காத்தியைக் காட்டி மிரட்டினர். மேலும், கயிற்றால் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் தள்ளிவிட்டனர். பின்னர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் உட்பட சுமார் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இரவு மனைவியுடன் வீட்டிற்கு திரும்பிய ஜேம்ஸ், தனது தாய் கை, கால்கள் கட்டப்பட்டு கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், கட்டுகளை அவிழ்த்துவிட்டு விசாரித்துள்ளார். பின்னர், சம்பவம் தொடர்பாக சோமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளையில் தொடர்புடையோரை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
