விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்: ஒன்றிய அரசு

டெல்லி: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கும், உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பலமணி நேரம் நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வருகிறது.

இதனால் பல விமானங்களின் சேவைகளில் மாற்றமும் ஏற்படுகிறது. மேலும், இதுபோன்ற குண்டு மிரட்டல் புரளிகளால் விமானத்தை தரையிறக்குவதற்கான எரிபொருள் செலவு, விமான நிலைய கட்டணம். பயணிகளுக்கான இழப்பீடு என சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதனை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும், அண்மைகாலமாக இந்தியாவில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை அடுத்து சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. புதிய சட்டத் திருத்தத்தின்படி ரூ.1 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம் மற்றும் ரூ1 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர்.14 வரை விமானங்களுக்கு 999 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 666 வெடிகுண்டு மிரட்டல்கள் வத்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது.

 

The post விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: