பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.22,280 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று மானியங்களுக்கான துணைக்கோரிக்கைகள் மீதான முதல்நாள் விவாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெளிநாட்டிற்கு தப்பியோடிய விஜய் மல்லய்யாவுக்கு சொந்தமான ரூ.14,131.6 கோடி மதிப்பிலான சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்காக மீட்கப்பட்டுள்ளன. நீரவ் மோடி வழக்கில் பிஎஸ்பி மற்றும் தனியார் வங்கிகளுக்காக ரூ.1,052 .58 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

மெகுல் சோக்சி வழக்கில் ரூ.2,565.90 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை ஏலத்துக்கு விடப்படும். நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் தொடர்பான வழக்கில் ஏமாற்றப்பட்ட உண்மையான முதலீட்டாளர்களுக்கு ரூ.17.47 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பெரிய வழக்குகளில் இதுவரை ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. 2021-22ல் வெளிநாட்டு சொத்து விவரங்களை வௌியிட்டு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 60,467ஆக இருந்த நிலையில், அது 2024-25ல் 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ஜிடிபி வளர்ச்சி குறைவு தற்காலிக வீழ்ச்சி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இந்தியா நிலையான, நீடித்த வளர்ச்சியை கண்டுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக 8.3 சதவீதமாக உள்ளது. நடப்பு 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 5.4 சதவீதமாகவும் உள்ளது. இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாக உள்ளது. இது இந்தியா மற்றும் உலகின் மற்ற பொருளாதார நாடுகளுக்கு ஒரு சவாலான காலம். இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி குறைந்தது என்பது ஒரு தற்காலிக வீழ்ச்சி. இது இனிவரும் காலாண்டுகளில் பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சி பெறும்” என்று தெரிவித்தார்.

* வேலைவாய்ப்பின்மை 3.2% குறைந்துள்ளது
மக்களவையில் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன், “கடந்த 2017-18ம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6 சதவீதமாக இருந்த நிலையில் அது தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னேற்றத்தை காட்டுகிறது. ஒட்டுமொத்த உற்பத்தி துறைகளில் பாதி துறைகள் வலுவான நிலையில் உள்ளன. 2024 ஜூலை – அக்டோபருக்கு இடையிலான காலகட்டத்தில் அரசின் மூலதன செலவு 6.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

The post பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.22,280 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: