நெருங்கி வருகிறது பொங்கல் பண்டிகை: மாட்டு வண்டி போட்டிகளுக்கு தயாராகும் காளைகள்


நாகர்கோவில்: தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடக்கும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் மாட்டு பொங்கல் விழாவில், மாடுகளை அலங்கரித்து பூஜைகள் செய்து வழிபடுவார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் ஒன்று கூடி மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு வீர விளையாட்டுக்கள் நடைபெறும். குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு கிராமங்கள், நகரங்கள் தோறும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

குறிப்பாக ஈத்தாமொழி, செண்பகராமன்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மாட்டுவண்டி போட்டிகள் நடைபெறும். இதில் சீறிப்பாயும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுவது உண்டு. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் வழக்கம்போல் மாட்டு வண்டி போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்காக குமரி மாவட்ட விவசாயிகள் தங்களது காளை மாடுகளை தயார்படுத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கும் தங்களது காளை மாடுகள், வண்டியுடன் செல்வது வழக்கம். இதற்காக தற்போது தீவிர பயிற்சியில் காளைகளை ஈடுபடுத்தி வருகிறார்கள்.

இறச்சக்குளம், தாழக்குடி, செண்பகராமன்புதூர் பகுதிகளில் உள்ள வில்வண்டி காளைகள் காலையில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. காலை வேளையில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், இதை பயன்படுத்தி காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் காளைகளை வண்டியில் பொருத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகளும், வண்டியில் பொருத்தியவுடன் மின்னல் வேகத்தில் பறந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள காளைகள் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் நடந்த மாட்டு வண்டி போட்டிகளில், பரிசுகளை குவித்து வருகின்றன.

The post நெருங்கி வருகிறது பொங்கல் பண்டிகை: மாட்டு வண்டி போட்டிகளுக்கு தயாராகும் காளைகள் appeared first on Dinakaran.

Related Stories: