ஓசூர்: சீனா பிளாஸ்டிக் மலர்கள் வரவால், ஓசூர் பகுதியில் அலங்கார மலர்கள் உற்பத்தி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால், சீனாவின் பிளாஸ்டிக் மலர்களுக்கு ஒன்றிய அரசு தடை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரோஜா நகரம் என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பலவண்ண மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தளி, கெலமங்கலம் ஆகிய 3 பகுதிகளில், பசுமை குடில் மூலம் பல்வேறு வகையான ரோஜாக்களை உற்பத்தி செய்து, அதனை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், ரோஜா உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரோஜா உற்பத்தியை போன்று கார்னேசன், ஜெர்பரா, ஜிப்சோபிலா உள்ளிட்ட 100 வகையான அலங்கார மலர்கள், திறந்த வெளியிலும் மற்றும் பசுமை குடில் அமைத்தும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் அலங்கார மலர்கள் திருமணம், வரவேற்பு நிகழ்வு, கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது டெல்லி, கேரளா, நேபாளம், உள்நாடுகளில் வரவேற்பு உள்ளதால், தினமும் ஓசூர் பகுதியிலிருந்து 30 ஆயிரம் கட்டு மலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் அலங்கார மலர்கள் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வந்தாலும், சீனா பிளாஸ்டிக் மலர்களால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓசூர் பூக்கள் உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஹரீஸ் கூறியதாவது: இந்தியாவில் எங்கும் இல்லாத மண்வளம் மற்றும் தட்வெப்ப நிலை, ஓசூர் பகுதியில் உள்ளதால், இங்கு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். ஆனால் விமானம் மூலம் அனுப்புவதால் செலவுகள் அதிகரிக்கிறது. மேலும் உள்நாடுகளிலேயே ஆண்டு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை குறைத்து விட்டோம். ஆண்டுதோறும் அலங்கார மலர் உற்பத்தி அதிகரித்த நிலையில், தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் தயாரிக்கும் பிளாஸ்டிக் மலர்கள் வரவு அதிகரித்துள்ளதால், இயற்கை மலர்கள் உற்பத்தி ஆண்டுதோறும் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் தினமும் ₹10 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், தற்போது ₹5 கோடிக்கு மட்டும் வர்த்தகம் நடக்கிறது. கடந்த காலங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில், பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும்.
அப்போது கார்பன் டை ஆக்சைடு வெளியாவதை தடுக்க, மேடைகளில் அலங்கார மலர்கள் பயன்படுத்தப்பட்டது. மணக்கள் மற்றும் வெளிநாடுகளிருந்து வருபவர்களை, நோய் தொற்று பரவலை தடுக்க பொக்கே கொடுத்து வரவேற்பது வழக்கமாக இருந்தது. நாளடைவில் சீன பிளாஸ்டிக் மலர்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை அறியாமல் பிளாஸ்டிக் மலர்களை பயன்படுத்துகின்றனர். ஓசூரில் அதிகளவில் மலர் உற்பத்தி செய்வதால், பேரண்டப்பள்ளில் ₹22 கோடியில் தொடங்கப்பட்ட சர்வதேச மலர் சந்தையில், ₹100 கோடிக்கு வர்த்தகம் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் அவை சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே, ஓசூர் மலர் உற்பத்தி விவசாயிகளின் நலன் கருதி, சீன பிளாஸ்டிக் மலர்களுக்கு முற்றிலும் தடை விதிக்க ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலர் விவசாயத்தை ஊக்கப்படுத்த தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க வேண்டும். ஓசூர் பகுதியில் உற்பத்தி செய்யும் மலர்களை சர்வதேச மலர்சந்தை மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஒன்றிய அரசு தடை செய்ய எதிர்பார்ப்பு; சீன பிளாஸ்டிக் மலர்கள் வரவால் ஓசூரில் மலர்கள் உற்பத்தி பாதிப்பு: வர்த்தகம் பாதியாக சரிந்தது appeared first on Dinakaran.