டெல்லி: அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து அளித்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வுகாண உத்தரவிடப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் அதிமுக கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதற்கு முன்னதாக புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பல மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் அதை விசாரிக்காமல் முடிவெடுக்க கூடாது, விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முழுவதுமாக கேட்டறிந்த நீதிபதி புதிதாக ஒரு மனுவை பெற்று அதை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். புதிய மனுவும் புகழேந்தியால் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் மனுவின் மீது எடுக்கவில்லை. பின்னர் மூன்று முறை இதை நினைவு கூர்ந்து கடிதம் அனுப்பியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை.
விசாரணையும் செய்யவில்லை. இதனை தொடர்ந்து டில்லியில் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ் குமார் , சுப்பீர் சிங் சாந்து ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புகழேந்தியால் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகழேந்தி அளித்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வுகாண தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி மனோஜ் ஜெயின் உத்தரவிட்டார்.
The post இரட்டை இலை விவகாரம்: விரைந்து தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.