கூடலூர்: தமிழக அரசின் சார்பில் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கான தளவாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கான தளவாடப் பொருட்களை, கடந்த டிச. 4ம் தேதி, தமிழக அதிகாரிகள் 2 வாகனங்களில் கொண்டு சென்றனர். வல்லக்கடவு சோதனைச்சாவடியில் பொருட்களை கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி மறுத்தது. 5 நாட்களாக அனுமதி வழங்காததால், தளவாடப் பொருட்களுடன் வாகனங்கள் திரும்பி வந்தன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள அரசு தளவாடப் பொருட்களை பெரியாறு அணைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கியது.
தமிழக அரசு தரப்பில் 16 பணிகளுக்கு அனுமதி கோரி இருந்த நிலையில், வண்ணம் பூசுதல், அணைக்கு செல்லும் சாலை, கழிப்பறை, கழிவுநீர் வடிகால், ஆய்வு மாளிகை மராமத்து உள்ளிட்ட 7 பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது. மேலும் கட்டப்பனை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் அதிகாரிகள் முன்னிலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பராமரிப்புப் பணிகளுக்கான வாகனங்கள் வனத்துறை பகுதிகளுக்குள் சென்று வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட பராமரிப்புப் பணிகள் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 9 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) அதிகாரிகள் எம்.சாண்ட், சிமெண்ட், பெயிண்ட், சல்லி, டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் வல்லக்கடவு வழியாக அணை பகுதிக்கு செல்ல துவங்கி உள்ளனர். மேலும் அணையில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்புப் பணிகளுக்காக பொருட்களை கொண்டு செல்ல வரும் டிச. 31ம் தேதி வரை மட்டும் அனுமதி உள்ளது; பொருட்கள் சென்ற பின்பு, மேலும் பணிகள் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
The post பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக தளவாடப் பொருட்களுடன் தமிழக வாகனங்கள் பயணம் appeared first on Dinakaran.