* ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுமா? என எதிர்பார்ப்பு
தென்காசி: பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிப்பகுதி பெருமளவு சேதம் அடைந்துள்ளது. குற்றாலம் மெயினருவியில் பராமரிப்பு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக துவங்கி விட்ட நிலையில் பழைய குற்றாலம் அருவி பராமரிப்பையும் ஊராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்து. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் வெள்ளநீர் படிக்கட்டுகளில் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளபெருக்கு காரணமாக அருவிப்பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டண கழிப்பறையின் தரைத்தளம் பெயர்ந்து காணப்படுகிறது.
உடை மாற்றும் அறைகளில் கதவுகள் இல்லை. சிசிடிவி கேமிரா உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானதை தொடர்ந்து படிக்கட்டுகளில் ஓரமாக அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளும் தற்போதைய வெள்ளத்தில் மீண்டும் சேதம் அடைந்துள்ளது. தற்போது அருவிப்பகுதி பராமரிப்பு நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. நீர்வளத்துறை இதற்காக நிதி பெற்று டெண்டர் விட்டு தான் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கூறுகிறது.
இதற்கு பதிலாக உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி போன்று உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். மெயினருவியில் உள்ளது போன்று நீர் பாசன வசதிகளை மட்டும் நீர்வளத்துறை வசம் ஒப்படைத்துவிட்டு அருவிப்பகுதி மற்றும் கட்டிடங்களின் பராமரிப்பை ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பழைய குற்றால அருவிப்பகுதியில் கடும் சேதம்: பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் நீர்வளத்துறைக்கு சிக்கல் appeared first on Dinakaran.