நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 100 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணையும் 100 அடியை நெருங்கியுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இதன் மூலம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூடுதல் மழை கிடைக்கும், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென் மாவட்டங்களில் போதிய மழை இல்லை. எனினும் குறித்த காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 12ம் தேதி ஒரே நாளில் காலை 5 மணிக்கு தொடங்கிய மழை மறுநாள் காலை 6 மணி வரை 25 மணி நேரம் தொடர்ந்தது. அதன் பிறகும் ஒரு நாள், விட்டு விட்டு மழை தொடர்ந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. பாபநாசம் அணையில் 96.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து நேற்று காலை 100.55 அடியானது. அணைக்கு விநாடிக்கு 1061 கன அடி தண்ணீர் வருகிறது. அணை மூடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 135.04 அடியாக நீடிக்கிறது.
மணிமுத்தாறு அணையில் 96.84 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து நேற்று காலை 98.29 அடியானது. அணைக்கு விநாடிக்கு 1518 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது. இதனால் மணிமுத்தாறு அணையும் 100 அடியை நெருங்கி வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலையில் 11 மிமீ, காக்காச்சியில் 17 மிமீ, நாலுமுக்கு எஸ்டேட்டில் 22 மிமீ, ஊத்து எஸ்டேட்டில் 26 மிமீ மழை பதிவாகியுள்ளது. வேறு எங்கும் மழை இல்லை. இதனால் தாமிரபரணியில் கடந்த 3 நாட்களாக ஓடிய வெள்ளம் தணிந்துள்ளது.
மழையால் மூழ்கிய ெநல்லை குறுக்குத்துறை முருகன் கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவை சேறும், சகதியுமான காணப்பட்டது. அங்கு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளம் வடிந்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்யக் கூடும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 நாட்களில் கிடுகிடு உயர்வு
பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி காலை 69.20 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 100.55 அடியானது. கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 31 அடி உயர்ந்துள்ளது. இதே போல சேர்வலாறு அணை கடந்த 12ம் தேதி 68.57 அடியாக இருந்த நிலையில் 4 நாட்களில் மேலும் 67 அடி உயர்ந்து நேற்று காலை 135.04 அடியாக நீடிக்கிறது. மணிமுத்தாறு அணை கடந்த 12ம் தேதி காலை 80.14 அடியாக இருந்த நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் மேலும் 18 அடி உயர்ந்து நேற்று காலை 98.29 அடியாக உயர்ந்தது.
The post மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழையால் பாபநாசம் அணை சதம் அடித்தது: மணிமுத்தாறு அணையும் 100 அடியை நெருங்குகிறது appeared first on Dinakaran.