தென்பெண்ணை ஆற்றில் இரட்டை குழந்தைகள் சடலம்: தந்தையிடம் போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றில், கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரை பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பிறந்து சில மாதங்களே ஆன இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகள் சடலம் கட்டைப்பையில் வைக்கப்பட்டு மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவலறிந்து ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த பெண் குழந்தைகள் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பிரபாகரன், ஜெயப்பிரியா தம்பதியின் குழந்தைகள் என்பது தெரியவந்தது.
கர்ப்பிணியாக இருந்த ஜெயப்பிரியாவுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்ததால் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.

ஜெயப்பிரியாவுக்கு ரத்தப்போக்கு நிற்காததால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குழந்தைகளின் சடலங்களை பிரபாகரனிடம் மருத்துவர்கள் ஒப்படைத்து முறைப்படி அடக்கம் செய்யும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் மனைவி மருத்துவமனையில் இருந்ததால் பிரபாகரன் குழந்தைகளின் சடலங்களை ஒரு கட்டப்பையில் வைத்து கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post தென்பெண்ணை ஆற்றில் இரட்டை குழந்தைகள் சடலம்: தந்தையிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: