அரசு அலுவலகங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரியை சேர்ந்த கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழக சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியது தொடர்பாக செய்தி தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்தார். இதை பார்த்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக 2022 செப்டம்பர் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13ம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது? இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்கிறதா?. தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

The post அரசு அலுவலகங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: