காலை உணவுத் திட்டம் முதன்முதலில் – மதுரை மாநகரில் ஆதிமூலம் நகராட்சிப் பள்ளியில் 2022ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய நாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளைச் பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளை மண்ணில் இத்திட்டம் அனைத்து 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளான 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. அதன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழுந்தைகள் கூடுதலாகப் பயன்பெற்றனர்.
அந்நாள் முதல் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் நாள்தோறும் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வந்தனர். மாநிலத் திட்டக் குழுவின் மூலம் காலை உணவுத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலுமாக 5,410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளன.
தாய்மார்கள் தங்கள் வீட்டில் காலை உணவைத் தவிர்த்து வந்த தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவை விரும்பி உண்பதால் தங்களுடைய கவலை அகன்றதாகத் தெரிவித்துள்ளனர். புதுமைப்பெண் திட்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை பாரதியார் மகளிர் கல்லூரியில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிட ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024ம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடையாளமாகும்.
புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025ம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுவது போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியன்று கோவை மாநகரில் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயனடைகிறார்கள். இந்த மகத்தான திட்டத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு ரூ.360 கோடி இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.
புதுமைப்பெண் திட்டம் குறித்து மாநில திட்டக் குழுவினால் ஈரோடு, வேலூர், திருவள்ளூர், சென்னை, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 5,095 மாணவிகள் பயிலக்கூடிய 84 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு 2023 நவம்பர் முதல் 2024 பிப்ரவரி வரை நடைபெற்றது. இந்த ஆய்வின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள மாணவிகளைவிட கிராமப்புற மாணவிகள் இத்திட்டத்தால் அதிகளவில் பயனடைந்துள்ளனர் என்பதும், பொருளாதாரக் குறைவு காரணமாக படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருந்த கிராமப்புற மாணவிகள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு நல்ல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
இத் திட்டப் பயனாளிகளில், பிற்படுத்தப்பட்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமூகங்களைச் சார்ந்தவர்கள் 99.2 சதவீத மாணவிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களில், ஏறத்தாழ 3 சதவீதத்தினர் பெற்றோர் இருவரையும் அல்லது தாய்-தந்தை இருவரில் ஒருவரை இழந்தவர்கள் என்பதுடன் இவர்களில் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6 சதவீதத்தினரும், விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3 சதவீதத்தினரும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளை இத்திட்டத்தினால் பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
எண்ணும் எழுத்தும் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் கற்றலின் அடிப்படைகளான வாசித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகியவற்றைக் கற்று அவற்றை உறுதிப்படுத்துவது “எண்ணும் எழுத்தும்” திட்டம். இத்திட்டம் மாணவர்கள் படித்துப் புரிந்து கொண்டு பிழையின்றி எழுத, எண்ண வகை செய்யும் புதிய திட்டமாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022ம் ஆண்டு ஜூன் 13ம் தேதியன்று தொடங்கிவைத்த இத்திட்டம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் திட்டமாகும்.
இத்திட்டம் குறித்த மாநில திட்டக் குழுவின் ஆய்வின் மூலம் தொடக்க கல்வியின் தரம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் கற்கும்போது ஏற்பட்ட நேர விரயம் நீங்கி குறித்த நேரத்தில் கற்பதற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது. பாடத்திட்டத்துடன் உள்ளடக்கத்தைச் சீரமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகள், பொருள் உள்ளடக்கம், ஆசிரியர் பயிற்சி, நேர மேலாண்மை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை மேம்பட்டுள்ளன. இத்திட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளது.
The post முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.