வேடசந்தூர்: தர்மபுரியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (27). இவரது மனைவி கிருத்திகா (27). டாக்டர் தம்பதியான இவர்கள், தங்களது நான்கு மாத கைக்குழந்தையுடன், திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு சாமி தரிசனம் செய்ய காரில் கிளம்பினர். காரை கிருத்திகாவின் தம்பி பாவேந்தர் (25), கூகுள் மேப் பார்த்தபடி ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை 5 மணி அளவில், வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தம்மனம்பட்டி பகுதியில் வந்த போது, பழநிக்கு செல்ல மண் சாலையை கூகுள் மேப் காட்டி உள்ளது. அந்த வழியில் கார் சுமார் பத்து மீட்டர் தூரம் சென்றதும், சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் காரை அங்கிருந்து இயக்க முடியவில்லை. சேற்றில் சிக்கிய இடம் குழியாக இருந்ததால், காரில் இருந்து வெளியேறவும் முடியாமல், டாக்டர் தம்பதி கைக்குழந்தையுடன் பரிதவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சேற்றுக்குள் சிக்கிய காரை, பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு காரில் வந்தவர்கள், வேடசந்தூர் வழியாக பழநிக்கு புறப்பட்டு சென்றனர்.
The post டாக்டர் தம்பதி சென்ற காரை குழியில் தள்ளிய கூகுள் மேப்: கைக்குழந்தையுடன் சேற்றில் சிக்கினர் appeared first on Dinakaran.