நம் பலம் நமக்கு தெரியவில்லை தமிழ்நாட்டில் பாஜ வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை: அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பேச்சு

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா, எந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைந்துள்ளார். நம் பலம் நமக்கு தெரியவில்லை. கிட்டத்தட்ட 34 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 23 தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 19.3 சதவீத வாக்குகளை பெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலில், 20.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். பெரிய கூட்டணி இன்றியும், பிரதமர் வேட்பாளர் இன்றியும் நாம் 1 சதவீதம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளோம். பாஜவினர் தமிழகத்தில் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை, 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி 18.80 சதவீத வாக்குகளை பெற்றது. 2024 தேர்தலில் 18.28 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அரை சதவீதம் வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.

2014ல் பாஜ 8 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது, 5.56 சதவீத வாக்குகளை பெற்றது. 2024 தேர்தலில் பா.ஜனதா 13.15 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும், ஆனால், 11.24 சதவீத வாக்குகளை பெற்றது. 1.91 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜவை விட அதிமுக ஒரு சதவீதம் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம். ‘யானைக்கு பலம் தும்பிக்கை, நமக்கு பலம் நம்பிக்கை’.

எந்த ஒரு மனிதனுக்கும் நம்பிக்கை இருந்தால் அவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியலாக இருந்தாலும் நம்பிக்கை என்பது மிகப்பிரிய ஆயுதம். அந்த நம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம். அதைநாம் உணர வேண்டும். சட்டசபையில் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் 68 ஆயிரத்து 467 பூத் பாகம் உள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்ற, ஒரு பூத்துக்கு 9 பேர் நியமிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் நம் வெற்றி உறுதி. சில மாவட்டங்களில் அதிமுக ஐ.டி.விங் முறையாக செயல்படவில்லை. அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு, வருகிற சட்சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும். சட்டசபை தேர்தலுக்கு 14 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

தேர்தல் கூட்டணியை பொறுத்தவரையில் நிச்சயம், அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலும் இப்படி தான் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கலாம். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி, மக்கள் எதிர்பார்க்கும், விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

* 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக பொதுக்குழுவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை மத்திய அரசு கைவிட வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பினை நடத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த கல்வியை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை, மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நம் பலம் நமக்கு தெரியவில்லை தமிழ்நாட்டில் பாஜ வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை: அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: