வேளிமலை குமாரசுவாமி கோயிலில் காவடி பவனி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

*திங்கள்சந்தை- தோட்டியோடு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தன

திங்கள்சந்தை : வேளிமலை குமாரசுவாமி கோயில் காவடி பவனியையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் திங்கள்சந்தையில் இருந்து தோட்டியோடு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தன.தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயிலில் நேற்று காவடி பவனி திருவிழா நடை பெற்றது. இதனால் தக்கலை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வந்த வாகனங்கள் அழகியமண்டபத்தில் இருந்து திங்கள்சந்தை வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோன்று தக்கலை நீதிமன்றம் வழியாகவும் இரணியலுக்கு திருப்பி விடப்பட்டன.

இந்த சாலையில் இரணியல் கோணம் பகுதியில் இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக வந்த வாகனங்கள் இரணியல் ரயில் நிலையம் மற்றும் ஆழ்வார்கோயில், இரணியல் காற்றாடி முக்கு ஜங்ஷன் வழியாகவும் சென்றன.இதேபோன்று நாகர்கோவிலில் இருந்து தக்கலை வந்த வாகனங்கள் தோட்டியோட்டில் இருந்து இரணியல், திங்கள்நகர் வழியாக திருப்பி விடப்பட்டன.

இரணியல் மாநில நெடுஞ்சாலையில் அந்த வழியாக சென்று வரும் வாகனங்களே கடும் நெருக்கடிக்குள் சென்று வருகின்றன. இதனிடையே தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்கள் இரணியல் மாநில நெடுஞ்சாலையில் திருப்பிவிடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் இருபுறமும் திங்கள்சந்தையில் இருந்து தோட்டியோடு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நெருக்கடிக்குள் சிக்கி தவித்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால் காலையிலிருந்து மாலை வரை வாகனங்கள் கடும் நெருக்கடிக்குள் சிக்கி சென்று வந்தன. இந்த வாகன நெருக்கடி குளச்சல், கருங்கல், நெய்யூர் அழகியமண்டபம் சாலைகளிலும் இருந்தது. இதனால் மாணவர்கள், வேலைக்கு சென்று, வந்தவர்கள் என பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல பயணிகளின் அன்றாட பணிகள் முழுவதுமாக முடங்கின.

சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இரணியல் மாநில நெடுஞ்சாலையை விரிவு படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பல மடங்கு வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையிலும் சாலை இதுவரை விரிவுபடுத்தப் படவில்லை. இதனால் இந்த வழியாக சென்று வரும் வாகனங்கள் தினமும் நெருக்கடிக்குள் சிக்கி சென்று வருகின்றன. இந்த நிலையில் தக்கலை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்களும் இங்கு திருப்பி விடப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டது. எனவே இந்த சாலையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

நேற்றைய போக்குவரத்து நெருக்கடிக்குள் வெளிமாநில ஐயப்ப பக்தர்களும் பலர் வாகனங்களுடன் சிக்கினர். அவர்கள் சாலைகள் பிரியும் ஒவ்வொரு இடத்திலும் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் எப்படி செல்வது என கேட்டவாறே சென்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் போக முடியவில்லை என்ற பதட்டமும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

The post வேளிமலை குமாரசுவாமி கோயிலில் காவடி பவனி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: