காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட கால்வாயில் சிக்கிய கார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், புதிதாக இணைக்கப்பட்ட செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு, செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் சுமார் ₹300 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ் 51 வார்டுகள் உள்ளன. இதில், 40 வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு, 1978ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 40 வார்டுகளில் குடியிருப்பு, வணிகம் என சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு காஞ்சிபுரம் நகருடன், தேனம்பாக்கம், ஓரிக்கை, நத்தப்பேட்டை ஆகிய ஊராட்சிகளும், செவிலிமேடு பேரூராட்சி ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. அன்று முதல், புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் செவிலிமேடு, வேதாச்சலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. நவீன முறையில் அமைக்கப்படும் இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்காக கழிவுநீர் தொட்டிகள், குழாய்கள் தயாராக கட்டப்பட்டு பூமியில் புதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சாலையின் நடுவில் குழி தோண்டப்பட்டு 9 மீட்டர் இடைவெளியில் கழிவு நீர் தொட்டிகள் இறக்கப்படுகின்றன.

இதனுடன் குழாய்களை இணைப்பதற்காக சாலையில் பள்ளம் எடுக்கப்படுகிறது. இந்த பள்ளங்களில் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்பு பள்ளத்தை அந்த மண்ணைக் கொண்டு மூடிவிட்டு செல்கின்றனர். அந்த மண் அழுந்தி அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன. மேலும், மழை பெய்ததால் மண் சேறும், சகதியுமாகி கடந்த சில நாட்களாக டூவீலர், கார்கள், மாடு என அனைத்தும் இந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
நேற்று செவிவிமேடு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ பள்ளத்தில் சிக்கி அதில் இருந்த மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கூறுகையில், ‘பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதித்த பின்பு அதன்மீது கான்கிரீட் கலவை போடவேண்டும் அல்லது கூடுதலாக பார் மண் சேர்த்து பள்ளத்தை அடைத்தால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது. ஆனால் பள்ளத்தில் எடுத்த அதே மண்ணை மீண்டும் மூடிவிட்டு செல்வதால் மழையில் மண் அழுந்தி அடிக்கடி வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. குறைந்தபட்சம் குழாய் பதித்த பகுதிகளில் பேரி கார்டு தடுப்பு, எச்சரிக்கை பதாகைகளாவது வைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்றார்.

The post காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட கால்வாயில் சிக்கிய கார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: