கொள்ளிடம் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால் நெற்பயிர் சாய்ந்து சேதம்

*விவசாயிகள் வேதனை

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால் நெற்பயிர் கீழே சாய்ந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு கனமழை விட்டு விட்டு பெய்து. கடற்கரையோரம் உள்ள கிராமப் பகுதிகளில் மழை மிதமாக பெய்தாலும் காற்று வேகமாக வீசியது.

கொள்ளிடம் அருகே புளியந்துறை, தாண்டவன்குளம், தற்காஸ், கடவாசல், புதுப்பட்டினம், ஆலங்காடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மழை அளவு குறைந்து காணப்பட்டாலும் காற்று வேகமாக வீசியது. இதனால் கரையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர் வயலிலேயே சாய்ந்தது. நேரடி விதைப்பு செய்த சம்பா நெற்பயிர் தற்போது தொண்டை பயிராகவும் கதிர் வெளியே வந்தும் இருந்து வந்த நிலையில் மழையுடன் காற்றும் வேகமாக வீசியதால் நெற்பயிர் வயலிலேயே சாய்ந்தன.

இதனால் கதிர் வரவேண்டிய நெற்பயிற் கதிர் இனி வராத நிலையும், கதிர் வெளியே வந்து சாய்ந்த நெற்பயிர் இனி பயன் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வருடம் தீவிரமாக சம்பா நெற்பயிர் சாகுபடி செய்து நெற்பயிர் செழிப்பாக வளர்ந்து வந்த நிலையில் மழை மற்றும் காற்றில் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

The post கொள்ளிடம் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால் நெற்பயிர் சாய்ந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: