திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழாவில், மாவட்ட திமுக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கலைஞர் சிலை முன்பு திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் தீபத்திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சி.என்.அண்ணாதுரை எம்பி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் வரவேற்றார்.கேசரி, வெண்பொங்கல், தக்காளி சாதம், காய்கறி சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட அறுசுவை உணவை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், திருவண்ணாமலையில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் தீபத்திருவிழா முன்னிட்டு ஆன்மிக பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி வருகிறோம். காலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து உணவு வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள். எனவே, இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டமும், அதைத்தொடர்ந்து, நானும், அறநிலையத்துறை அமைச்சரும் கலந்து கொண்ட கூட்டமும் என மொத்தம் 3 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. வாகனங்கள் நிறுத்தும் இடம், தற்காலிக பஸ் நிலையங்கள், அன்னதானம் வழங்க முன் அனுமதியுடன் சிறப்பு ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளும் முதல்வரின் ஆணையை பெற்று சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்திருந்தால், போக்குவரத்து தடையின்றி இயங்க உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்வரிடம் நிதியை பெற்று நிரந்தரமாக சாலைகள் சரி செய்யப்படும். எந்த காரணம் கொண்டும் போக்குவரத்து பாதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை அருகே திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் பணியை, அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
மாநில தொமுச துணைத்தலைவர் க.சவுந்தரராஜன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், பொதுக்குழு உறுப்பினர் பழனி, மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம்.நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், சு.விஜயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் குட்டி புகழேந்தி, இல.குணசேகரன், வழக்கறிஞர் டி.எம்.கதிரவன், பா.அரிகிருஷ்ணன், வேங்கிக்கால் வெற்றி, பரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் கார்த்திகை தீபத்திருவிழாவில் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.