நாடாளுமன்ற மக்களவையில் அரசியலமைப்பு தினம் குறித்த விவாதம்: பிரியங்கா காந்தி முதன்முறையாக உரை

புதுடெல்லி: அரசியலமைப்பு தினம் குறித்த விவாதம் இன்றும், நாளையும் நடைபெறும் நிலையில், வயநாடு எம்பி பிரியங்கா காந்தி முதன்முறையாக மக்களவையில் உரையாற்றுகிறார். கடந்த நவம்பர் 25ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி நிறைவு பெறுகிறது. அதானி லஞ்சப் புகார் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இன்றும், நாளையும் மக்களவையில் அரசியலமைப்பு தினம் குறித்த விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியது.

மதியம் 12 மணி வரை கேள்வி நேரம் நடந்தது. அப்போது அதானி விவகாரம் குறித்து எதிர்கட்சிள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆளும் கட்சி சார்பில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசியலமைப்புக்கு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அது தொடர்பான விவாதத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 60 நிமிடங்கள் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அதன்பின் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, எம்பிக்கள் பத்ரிஹரி மஹ்தாப், ஜெகதம்பிகா பால், தேஜஸ்வி சூர்யா, ரவிசங்கர் பிரசாத், டி. புரந்தேஸ்வரி, அபிஜித் கங்கோபாத்யாய், பி.பி.சவுத்ரி, அப்ராஜிதா சாரங்கி ஆகியோர் உரையாற்றினர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான பிரியங்கா காந்தி முதல் முறையாக இன்று மக்களவையில் பேசுகிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் விவாதத்தில், முக்கிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். நாளை பிரதமர் மோடி பதிலளிப்பார், மேற்கண்ட விவாதம் தொடர்பாக பதிலளித்து உரையாற்றுவார். இந்த விவாதத்தின் போது, அவசர நிலை, எதிர்க்கட்சியினரால் உருவாக்கப்படும் பொய்யான கதைகள், பல அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்து குறிப்பிட்ட எம்பிக்கள் உரையாற்ற உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post நாடாளுமன்ற மக்களவையில் அரசியலமைப்பு தினம் குறித்த விவாதம்: பிரியங்கா காந்தி முதன்முறையாக உரை appeared first on Dinakaran.

Related Stories: