சென்னை: அதிகரிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணாக ஓட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வேறு வழியில்லாமல் குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படும் உணவுகளை வழங்கும் வகையில் விறகு அடுப்புகளை ஓட்டல்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. சென்னையில் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சிறிய ஓட்டல்களை நம்பி உள்ள பேச்சுலர்ஸ் திண்டாடி வருகின்றனர். ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும், சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
காஸ் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ டிரைவர்கள், பங்க்குகள் முன்பு பல மணி நேரம் காத்திருந்தும், காஸ் கிடைக்காததால் ஆட்டோக்களை இயக்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றனர். எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் அன்றாட வருமானத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைக்காததால் சென்னை, பெங்களூரு, மும்பை என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள முன்னணி உணவகங்களில், பல்வேறு வகையான டிபன் மற்றும் அரிசி உணவு வகைகள் வழங்கப்படாது என ஓட்டல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதேபோல், சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி கிடையாது. சப்பாத்தி மற்றும் தோசை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கலவை சாதங்கள் வழங்கப்படும் என்றும், வாரத்தில் இருமுறை அப்பளம் அல்லது முட்டை வழங்கப்படும் என விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல நகரங்களில் சமையலுக்கு பயன்படும் வணிக காஸ் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை, என ஒட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் இந்த பிரச்னை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இருக்கக்கூடிய சிலிண்டரை வைத்து கடையை நடத்துவதாகவும், நாளை கடை திறக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் புலம்புகின்றனர். மேலும் பிரபல ஓட்டல்களில் இட்லி, தோசை, ஆம்லெட் உள்ளிட்டவை கிடைக்காது, வெரைட்டியான உணவுகள் கிடைக்காது என்றும் போர்டுகளே வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பேச்சுலர்கள் விடுதிகளில் தங்கி இருக்கக்கூடிய மாணவர்கள் என ஓட்டல் உணவுகளை நம்பி இருக்கக்கூடிய லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக வீடுகளுக்கான காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் 2 நாட்களிலேயே வந்துவிடும். ஆனால் தற்போது ஒரு வாரமானாலும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை என ஏராளமான மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு எப்போது சரியாகும் என்பது தெரியாததால் ஏராளமான பேச்சுலர்களும், குடும்பத்தினரும் மின்சாரத்தில் இயங்க கூடிய இன்டக்ஷன் அடுப்புகள் பக்கம் மாற தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு, ஓட்டல் தொழிலை ஒட்டு மொத்தமாக முடக்கியுள்ளது.
ஈரான்-, இஸ்ரேல், அமெரிக்க போர் தொடர்ந்து கொண்டிருப்பதால் தற்போதைய சூழலில் சிலிண்டர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மீண்டும் விறகு அடுப்புகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக விறகு கடைகளை நோக்கி ஓட்டல் உரிமையாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.இவ்வளவு நாள் காத்து வாங்கிக் கொண்டிருந்த விறகு கடைகளில் தற்போது புக்கிங் முறையில் விறகுகள் விற்பனையாகி வருகிறது. விறகு கடை வியாபாரிகளும் விறகுகளை மொத்தமாக வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனையாகி கொண்டிருந்த நிலையில், தற்போது விறகு கடைகளை ஓட்டல்காரர்கள் போட்டி போட்டு வாங்க தொடங்கியுள்ளதால் ஒரு கிலோ ரூ.150 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நகர பகுதிகளில் விறகுகளுக்கும் டிமாண்ட் இருப்பதால் நீண்ட நேரம் சமைக்க வேண்டிய பிரியாணி, பரோட்டா போன்ற உணவுகள் தவிர்க்கப்பட்டு, எளிய உணவுகள் மட்டுமே சமைப்பதற்கான முயற்சியில் ஓட்டல் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால், சிறிய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடும் அபாயம் ஏற்படும் என்றும், இது வேலைவாய்ப்பையும் பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.நகர்ப்புறங்களில் விறகு அடுப்பை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக சிரமமாக இருந்தாலும், வேறு வழியின்றி ஓட்டல் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். விறகு அடுப்பை பயன்படுத்தி சமைக்க இயலாத பல உணவகங்கள் சென்னையில் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஓட்டல்களை அன்றாடம் உணவுக்காக நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
