வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் குறித்த வதந்தி; பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு என பேட்டி

சென்னை: வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர போவதாகவும், தட்டுப்பாடு ஏற்பட இருப்பதாகவும் வதந்தி பரவியது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்க்கில் கார், மோட்டார் சைக்களில் படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக பெட்ரோல், டீசலை பெரிய கேன், பாட்டில்களில் வாகன ஓட்டிகள் வாங்கி சென்றனர். ஆனால் 21 நாட்கள் 7 ஆயிரம் பங்குகளில் பெட்ரோல், டீசல் கையிருப்பு இருப்பதாக பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்துள்ளன. ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானும் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து தொடர்ந்து கடுமையாக தாக்குதல் நடந்து வருகிறது. ஈரான், தனது நாட்டை சுற்றியுள்ள சவூதிஅரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ ஏவுதளங்கள், முகாம்கள் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், உலக நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் லோடுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்துள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடலில் எண்ணெய் கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் வரமுடியாமல், ஓமன் வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குவைத், கத்தாா், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு உற்பத்திக்கான திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ளது. அதன் இருப்பும் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை பெரும்பாலான எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளன. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களுக்கான வர்த்தக சிலிண்டர் வினியோகம் என்பது கடந்த செவ்வாய் கிழமை முதல் நிறுத்தப்பட்டது. இதனால், சிறிய டீக்கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஓட்டல்களில் கையிருப்பில் இருந்த சிலிண்டர்களை பயன்படுத்தி கடந்த 2 நாட்களாக உணவு பொருள்களை தயாரித்து வழங்கின. மேலும் வழக்கமாக தயாரித்து வழங்கப்படும் உணவு பொருட்கள் நிறுத்தப்பட்டது. எந்த உணவு எளிதாக செய்ய முடியுமோ? அந்த உணவுகள் மட்டும் தயாரித்து வழங்கப்படுகிறது. மதியம் சாப்பாட்டிற்கு ஒரு சாம்பார், ஒரு கூட்டு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்றும் கடைகள் முன்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவகங்கள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. பல உணவகங்கள் சிலிண்டர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. சிறிய டீக்கடைகளில் வெறும் டீ மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. வடை, பஜ்ஜி, சமோசா உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க பல உணவகங்களில் விறகு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனா்.

அதுவும் பெரிய ஓட்டல்களில் விறகு அடுப்புக்கான வசதி இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையோரங்களில் கடைகளை வைத்திருப்பவர்கள் கடைகளுக்கு வெளியே அடுப்பை போட்டு சமையல் செய்து வருகின்றனர். இப்படியே சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்து பழைய காலத்திற்கே அதாவது, விறகு அடுப்பு காலத்துக்கே போக வேண்டியது தான் என்று ஒவ்வொருவரும் புலம்பி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நெருக்கடிக்கு மத்தியில் நாளை(இன்று) முதல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயரப்போவதாகவும், தட்டுப்பாடு ஏற்பட இருப்பதாகவும் நேற்று இரவு சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நள்ளிரவு கூடியதால் வாகன ஓட்டிகள் கடும் பிதியடைந்தனர். அதேபோன்று சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், மைலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணாநகர், அமைந்தகரை, எழும்பூர், அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நேற்றிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றதை காண முடிந்தது. தங்களது வாகனங்களின் டேங்குகளை முழுவதுமாக நிரப்பிச் சென்றனர். மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தால் என்ன செய்வது என்று முன்எச்சரிக்கையாக பெரிய கேன், பாட்டில்களில் வாங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது. இதே நிலை தான் இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. அனைத்து பங்குகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. விடிய, விடிய கூட்டம் இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. நாடு முழுவதும் 90 நாட்களுக்கு போதிய அளவுக்கு எரிப்பொருள் கையிருப்பு இருப்பதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.முரளி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே.பி.முரளி அளித்த பேட்டி:
எனக்கு கிடைத்த தகவல்படி தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் 21 நாட்களுக்கு ஸ்டாக் உள்ளது. அதற்கு முன்னதாக பெட்ரோல், டீசல் வந்து விடும் என்று பெட்ரோலியம் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தேவையான பெட்ரோல், டீசலை மட்டும் பொதுமக்கள் வாங்கவும். கிடைக்காது என்று 50 லிட்டர் பெட்ரோலோ அல்லது 100, 200 லிட்டர் டீசலை கொண்டு போய் வீடுகளிலோ, அலுவலகத்திலோ கொண்டு போய் வைப்பது தேவையில்லாததது. இது மாதிரி செய்வதால் தான் டீமாண்ட் ஏற்படுகிறது. இது தேவையை இல்லை. நீங்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லலாம். வழியில் எந்த பங்க்குகளில் நுழைந்தாலும் உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்கும். கடைக்காமல் இருக்காது. மத்திய அரசும், ஆயில் கம்பெனியும் ஒன்று சேர்ந்து தேவைக்கு மேலாக பெட்ரோல் பங்கை தமிழ்நாடு முழுவதும் வைத்துள்ளனர். 7 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் உள்ளது. 10 வருடத்திற்கு முன்னர் 4 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் தான் இருந்தது.

அதனால், நீங்கள் பெட்ரோல் பங்கை தேடி போக வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் கண்ணிலே இருக்கும். டீமாண்ட் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வர்த்தக சிலிண்டர்களை ஆயில் கம்பெனிகள் நிறுத்த சொல்லியிருக்கிறார்கள். வர்த்தக சிலிண்டர் இல்லை. இதனால் நிறைய ஓட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்எச்சரிக்கையாக முதலில் எல்பிஜிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வரும் என்று பெட்ரோல் பங்க்கை நோக்கி செல்கிறார்கள். நார்மலா பெட்ரோல் பங்க்கில் என்ன விற்பனை ஆகுமோ? அதை விட அடுத்த ஒரு அரை மடங்கு அதிகமாகி கொண்டே இருக்கிறது எல்லா இடங்களிலும் நடக்கிறது. சில இடங்களில் இரட்டிப்பு விற்பனை நடக்கிறது. அது தேவையை இல்லாதது. நெருக்கடியான சூழ்நிலையில் மற்ற நாடுகளில் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். நமது நாட்டில் விலையை உயர்த்த வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கி வருவதால் விரைவில் காலியாகி, பெட்ரோல், டீசலுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related Stories: