தமிழகம் முழுவதும் பரவலாக கொட்டி தீர்த்தது; நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 25 மணி நேரம் தாண்டியும் மழை நீடிப்பு.! அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 50 செ.மீ. பெய்தது

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 25 மணி நேரம் தாண்டியும் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 50 செ.மீ., மழை கொட்டியது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 25 மணி நேரம் தாண்டியும் நீடித்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, நம்பியாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், சுத்தமல்லி, தாழையூத்து, சங்கர்நகர் மற்றும் புறநகர் பகுதிகளான சீவலப்பேரி, பொன்னாக்குடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ெபாதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் மதியம் முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்றிரவு முதல் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால் தடை நீடிக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியிலும் நேற்று தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் விடிய, விடிய மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் நாட்டுப்படகுகளும், 522 விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள்

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், அரியலூர், திருச்சி, காரைக்கால் மாவட்டங்களில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 220 மிமீ மழை பதிவானது. டெல்டா முழுவதும் இன்று பகலிலும் மழை நீடித்தது.

பயிர்கள் மூழ்கின

நாகை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர், திருவாரூரில் 2500 ஏக்கர், மயிலாடுதுறையில் 2500 ஏக்கர், தஞ்சை, கும்பகோணத்தில் சுமார் 1500 ஏக்கர், திருச்சியில் 1500 ஏக்கர் என மொத்தம் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிரில் மழை நீர் சூழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ராம் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏரிகள் நிரம்பி வழிந்ததால் 250 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தஞ்சை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கரூர், புதுக்கோட்டையில் மயிலாடுதுறை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. டெல்டாவில் சுமார் 1.50 லட்சம் மீனவர்கள் 3வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை.

300 ஏக்கர் சேதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோளம் சாகுபடியில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் முதலிடம் பிடித்து வருகிறது. வேப்பந்தட்டை, அரும்பாவூர், பாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் மக்காச் சோள பயிர்கள் மழை நீரில் சாய்ந்து விட்டன.

மதுரை

மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை தொடர்ந்து மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மீனாட்சி அம்மன் கோயில் சுற்றி உள்ள வீதிகள், கீழ மாசி வீதி, செல்லூர் உள்ளிட்ட பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழையால், மூங்கில்காடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், 100 குடும்பத்தினர் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று முழுவதும் தொடர் சாரல் மழை பெய்தது. இன்றும் காலை முதல் தொடர் சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய சாரல் மழை பெய்தது. இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்திலும் நேற்று தொடங்கி இன்று காலை வரை மழை கொட்டித் தீர்த்தது.

குமரி

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் மோதிரமலை-குற்றியாறு இடையே தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொடர் மழையின் காரணமாக இன்றும் (13ம்தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்று (13ம் ேததி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெலிங்டன் வடிகால் ஓடை தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் 26 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

The post தமிழகம் முழுவதும் பரவலாக கொட்டி தீர்த்தது; நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 25 மணி நேரம் தாண்டியும் மழை நீடிப்பு.! அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 50 செ.மீ. பெய்தது appeared first on Dinakaran.

Related Stories: