டெல்லி : ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் குறித்து மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், “மத்திய கிழக்கு மோதல்களை தணிக்கத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அப்பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பும் முக்கியமாகும். பிரதமர் மோடியும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
பேச்சுவார்த்தை மூலமே பதற்றத்தை தணித்து பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என ஒன்றிய அரசு நம்புகிறது. மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாட்டை இந்தியா மதிக்கிறது. பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு மார்ச் 1ல் மோடி தலைமையில் கூடியது. போர் பாதித்த மேற்கு ஆசிய பகுதிகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு அக்கறை கொண்டுள்ளது. வளைகுடா பகுதியுடன் இந்தியா 200 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலைக்குரியது; பல இந்தியர்கள் கப்பலில் மாலுமிகளாக உள்ளனர். கப்பல்கள் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்தியர்களுக்கு எச்சரிக்கை வழங்கி வருகிறது. இந்தியர்கள் பாதுகாப்பான, கிடைத்த வழிகளில் வெளியேற பிப்.14 அன்றே இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தினோம். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பிரச்சனை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. போர் மேலும் தீவிரமடைந்து மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு மிக மோசமடைந்துள்ளது. உலகில் அமைதியையும் பாதுகாப்பையையும் பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் வருந்தத்தக்கது.”இவ்வாறு தெரிவித்தார்.
