சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர், உணவுத்துறைச் செயலாளர், நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று ஒன்றிய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. மேலும் சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களிலும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பல டீலர்கள் நேற்று முதலே உணவு விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம்,உணவுத்துறைச் செயலாளர், நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே கையிருப்பிலுள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்து இன்று பிற்பகலுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் அறிவுறுத்தி இருந்தார். முன்னதாக தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு கியாஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என்றும், வணிக சிலிண்டர் தேவை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தங்கு தடையின்றி கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும்படி நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.

Related Stories: