இதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் நெருக்கடி நிலையில் இருந்தபோது கடந்த 1924 ஆண்டு ஏப்.13ம் தேதி பெரியாரின் தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிக்கு வழிநடத்தி சென்றார். இறுதியாக திருவாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய இச்சாலையில் அனைவரும் செல்லலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்துள்ளது. பெரியார் சமூகநீதி காக்க போராடி பெற்ற வெற்றியை நினைவு கூறும் வகையில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு, கடந்த 1994ம் ஆண்டு நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அண்ணா, கலைஞர் வழியில் பெரியாரை போற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து அறிவிப்பை விதி 110இன்கீழ் வெளியிட்டார். அதன்படி, நூற்றாண்டு விழாவின் போது, “கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் ரூ.8 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் சென்று பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அங்கு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சி கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பெரியாரின் நினைவகம் மற்றும் நூலகம் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டும் மறுசீரமைக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் ரூ. 8.50 கோடி மதிப்பிலான பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கு திராவிட கழக தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், கேரள அமைச்சர்கள் வாசவன், சஜி செரியன், தமிழக தலைமைச்செயலர் முருகானந்தம், கேரள அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
The post வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா : பெரியார் நினைவகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் இணைந்து திறந்து வைத்தனர்!! appeared first on Dinakaran.