திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை பாதிப்பை ஒன்றியக்குழுவினர் நேரடி ஆய்வு: மண்சரிவில் 7 பேர் பலியான இடத்தையும் பார்வையிட்டனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஒன்றியக்குழுவினர் நேரடி ஆய்வு நடத்தினர். மேலும், மண் சரிவில் 7 பேர் பலியான இடத்தையும் பார்வையிட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30ம் தேதி தொடங்கி 1ம் தேதி இரவு வரை வரலாறு காணாத அளவில் இடைவிடாமல் கனமழை பெய்தது. சுமார் 32 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. 13 பேர் உயிரிழந்தனர். 985 வீடுகள் இடிந்தன.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதன் அடிப்படையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட குழுவை அனுப்பியது. இக்குழுவினர் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஆய்வுப்பணியை முடித்துவிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், ஜல்சக்தி அபியான் திட்ட இயக்குநர் சரவணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சக பொறியாளர் தனபாலன் குமரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தை சேர்ந்த கே.எம்.பாலாஜி ஆகியோர் கொண்ட மத்திய குழு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது.

முன்னதாக, திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் தீபமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 7 பேர் பலியான இடத்தை பார்வையிட்டனர். அங்குள்ள வீடுகள், சாலைகள் சேதமடைந்திருப்பதை ஆய்வு செய்தனர். அப்போது, மண் சரிவால் வீடுகள் பாதித்துள்ளதால், முதற்கட்டமாக 20 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், உரிய நிதி கிடைத்ததும் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை தாலுகா, சின்ன காங்கேயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சம்பந்தனூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை கனமழையால் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டனர். மேலும், கீழ்பென்னாத்தூர் அடுத்த வேளாணந்தல் கிராமத்தில் மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கி சேதமான நெற்பயிர், கரும்பு, காய்கறி பயிர்கள் போன்றவற்றின் சேதத்தை பார்வையிட்டனர்.

அப்போது, தங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். நிவாரண தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அப்போது, நீரில் மூழ்கிய நெற்பயிரை வேதனையுடன் விவசாயிகள் காண்பித்தனர். பின்னர், கோணலூர் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை பார்வையிட்டனர். ஆய்வின்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி மற்றும் வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை பாதிப்பை ஒன்றியக்குழுவினர் நேரடி ஆய்வு: மண்சரிவில் 7 பேர் பலியான இடத்தையும் பார்வையிட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: