கொழும்பு: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக வெற்றி பெற்று அதிபரானார். இந்நிலையில் புதிய அதிபர் திசநாயகவை ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் இலங்கை அதிபர் திசநாயக இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகின்ற 15ம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து கேபினெட் செய்தி தொடர்பாளர் நளிந்தா ஜெயதிசா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இலங்கை அதிபர் திசநாயக வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதிவரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்த பயணத்தின்போது அவர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவருடன் வெளியுறவு துறை அமைச்சர் விஜிதா ஹேரத் மற்றும் நிதித்துறை துணை அமைச்சர் அனில் ஜெயந்தா பெர்னான்டோ உள்ளிட்டோர் உடன் வருகின்றனர்” என்றார். செப்டம்பரில் அதிபராக பதவியேற்ற பின்னர் அனுர குமார திசாயக முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை அதிபர் திசநாயக வரும் 15ம் தேதி இந்தியா வருகை appeared first on Dinakaran.