மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், கலினின் கிராட் நகரில் திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் துஷில் என்ற கப்பலை அறிமுகப்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். நேற்று மாஸ்கோ நகருக்கு சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தியா ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா-ரஷ்யா நட்புறவு உலகின் மிக உயரமான மலையை விட உயர்ந்தது. உலகின் மிக ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் அதை தொடருவோம் என்று கூறினார்.
The post இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்: ராஜ்நாத் சிங் உறுதி appeared first on Dinakaran.