பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் 200 சாலை பணிகள் நிறைவு: தாம்பரம் மாநகராட்சி தகவல்

தாம்பரம், டிச.10: தாம்பரம் மாநகராட்சியில், பல்வேறு திட்ட நிதிகளின் கீழ், பேருந்து, சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மூலம் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநகராட்சியின் ஆணையர் தலைமையில் உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட குழுவினரால் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது. தாம்பரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ₹19.75 கோடியில் 195 தார் சாலைகள் மற்றும் 58 சிமென்ட் சாலைகள் என மொத்தம 253 உட்புறச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 1வது மண்டலப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்ட நிதியின் கீழ், ₹7.45 கோடியில் 12.786 கிமீ தூரத்தில் 83 தார் சாலைகள் மற்றும் ₹2.23 கோடியில் 7.136 கி.மீ.,யில் 49 சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

2வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்ட நிதியின் கீழ் ₹1.51 கோடியில் 2.226 கி.மீ.,யில் 12 தார் சாலைகள் மற்றும் 1.303 கி.மீ.,யில் 9 சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 3வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்ட நிதியின் கீழ் ₹2.50 கோடியில் 3.911 கி.மீ.,யில் 27 தார் சாலைகள், 0.855 கி.மீ.,யில் 8 சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

4வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்ட நிதியின் கீழ் ₹66 லட்சம் மதிப்பீட்டில் 1.446 கி.மீ.,யில் 11 தார்சாலைகள், 1 சிமென்ட் சாலை 1.04 கி.மீ.,யில் ₹1.03 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் 200 சாலை பணிகள் நிறைவு: தாம்பரம் மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: