செய்யூர்: செய்யூர் பஜார் பகுதியில் இரவும் பகலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் சூழல் உருவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூரின் மையப்பகுதியில் பஜார் சாலை உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் வணிக வளாகங்கள், பேருந்து நிலையம், காவல் நிலையம், பள்ளிகள், கோயில்கள் உள்ளன. இதனால், இப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடுவதோடு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
முக்கிய சாலையாக கருதப்படும் பஜார் சாலையில் இரவும் பகலுமாக நூற்றுக்கணக்கான மாடுகள் மற்றும் ஆடுகள் சாலையை ஆக்கிரமித்து கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கால்நடைகள் வளர்ப்பவர்கள் கால்நடைகள் முறையாக பராமரிக்காதால் இந்த கால்நடைகள் சாலையில் திரிந்து வருவதாக பொதுமக்களிடையே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவ்வாறு சாலையில் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
மாநகராட்சி பகுதிகளில் இவ்வாறு சாலையில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு கால்நடைகளை வளர்ப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று கிராமப்புற சாலை பகுதிகளில் திரியும் கால்நடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களை கண்டு கொள்வதில்லை. எனவே, பெரும் விபத்துகள் நேரிடுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செய்யூர் பஜார் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.