ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழங்குடியினர் கிராமங்களான பூதநத்தம், செம்மநத்தம் பகுதிகளில் மாதவிடாய் தொடர்பான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி ஜெஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி சார்பில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பூதநத்தம், செம்மநத்தம் பழங்குடியினர் கிராமங்களில் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் தனபால் துவக்கி வைத்தார். இணைப் பேராசிரியரும், மருந்து வேதியியல் தலைவருமான முனைவர் காளிராஜன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் கோமதி சுவாமிநாதன் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தோற்றம் குறித்து விரிவாக விளக்கினார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் கனகாம்பாள் மாதவிடாய் சேர்க்கை கொள்கை குறித்து பேசினார்.
மாவட்ட எஸ்பி நிஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்வை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மாதவிடாய் குறித்து பழங்குடி மக்களுக்கு புரியும் வண்ணம் விளக்கி பேசினார்.
மேலும் மாதவிடாய் என்பது பல்வேறு கட்டுக்கதைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தொடர்புடையது. இது இளம் பருவப் பெண்களிடையே விழிப்புணர்வின்மைக்கு வழிவகுக்கிறது.
இதை முழுமையாக போக்க வேணடும். மாதவிடாயுடன் தொடர்புடைய பல்வேறு தவறான எண்ணங்கள் மற்றும் தடைகளை நீக்கி, பருவப் பெண்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக மாற்ற விழிப்புணர்வு வேண்டும். சுகாதாரமாக இல்லாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் அது எப்படி கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
அதைப் பற்றி பேசுவதற்கு நாம் வெட்கப்படக் கூடாது. இன்னும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். சிறு வயதிலேயே அவர்களுக்கு அதைப்பற்றி கற்பிக்கப்படுவது மிகவும் நல்லது என தெரிவிக்கப்பட்டது.
இதில் கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் மசினகுடி காவல் ஆய்வாளர், மசினகுடி வனச்சரகர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரிய உறுப்பினர்கள் ஜெயக்குமார், அருண்குமார் மற்றும் மாணவர்கள் நாகார்ச்சுனா, சரண்யா, தேஜஸ்வினி ரெட்டி, சுபிக்ஷா, ஐயூசா மற்றும் ஹன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 60 பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் வெங்கடேசன் நன்றி கூறினார்.
The post பழங்குடியினர் கிராமங்களில் மாதவிடாய் தொடர்பான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.