கொடைக்கானல் / மூணாறு : வார விடுமுறையையொட்டி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தென்னகத்து காஷ்மீரான மூணாறில் நடுக்கும் ‘கிடுகிடு’ பனிக்காலம் துவங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது.
குளிர் சீசன் மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், வார விடுமுறை நாட்களான நேற்று முன்தினமும், நேற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குறிப்பாக கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.
6ம் தேதி மூணாறு நகர், நல்லதண்ணி, லட்சுமி எஸ்டேட் போன்ற இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸை எட்டியது. இந்த பருவத்தில் இதுவே குறைந்த வெப்பநிலையாகும். தேவிகுளம், மாட்டுப்பட்டி, லாக்காடு, குண்டுமலை, சிட்டிவாரை, செண்டுவாரை, சைலண்ட் வேலி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மூணாறை ஒட்டியுள்ள பகுதிகளில் காலையிலும் மாலையிலும் மூடுபனி நிலவுகிறது. இனி வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் பெர்ன்ஹில் சாலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் நாயுடுபுரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கொடைக்கானல் நகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றியதையடுத்து போக்குவரத்து சீரானது.
The post கொடைக்கானல், மூணாறில் வாட்டுது பனி நடுக்கும் குளிர்காலம் ஆரம்பம் appeared first on Dinakaran.