பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின் விற்ற 9 வாலிபர்கள் சிக்கினர்

பெரம்பூர்: பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.  கொடுங்கையூர் பகுதியில் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை கொடுங்கையூர் மூலக்கடை பகுதியில் 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் 2 கிராம் மெத்தபெட்டமின் மற்றும் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ஹனி ஸ்ரீடிபன் (20), சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23), திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த லிங்குமணி என்ற மேத்யூ (23), ஆகாஷ் என்ற கிரி (23) மற்றும் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (29) என்பது தெரிய வந்தது.

இவர்கள் பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமின் வாங்கி வந்து சென்னையில் பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு விற்பனை செய்து வந்ததும், இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருக்கு ஒருவர் பழக்கமாகி அதன் மூலம் அவ்வப்போது மெத்தபெட்டமின் மற்றும் கஞ்சாவை கைமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று காலை வியாசர்பாடி கூட்செட் அருகே ஒருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் சிறிய கவரில் மெத்தபெட்டமின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சேர்ந்த அத்திக்கூர் ரகுமான் (25) என்பதும், இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சுபேர் என்ற சுபி (25) என்ற நபரிடமிருந்து மெத்தபெட்டமின் வாங்கி பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து முகமது சுபேரையும் கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் படி புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இம்ரான் (26), இர்பான் (24) ஆகிய 2 பேரை பிடித்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 3 கிராம் மெத்தபெட்டமின் கைப்பற்றப்பட்டது. இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைனை விற்பனை செய்துள்ளனர். உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின் விற்ற 9 வாலிபர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: