அறிக்கைகள் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம் இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதும் தமிழகம்தான்: அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி பதிலடி

கரூர்: அறிக்கைகள் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தமிழகம்தான் என்று அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்து உள்ளார். கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்க வில்லை என ஒரு அறிக்கை தரப்பட்டிருந்தது. அதற்கு பிறகும் அந்த அறிக்கை குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது.

ஒன்று ஒரு முறை படித்து தெரிந்திருக்கலாம். படித்து புரியவில்லை என்றால் பலமுறை படித்து யோசித்திருக்கலாம். புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் விளக்கத்தை கேட்டு, சரி பண்ணிக்கலாம். படித்தும் புரியவில்லை, தெரிந்தவர்களிடம் கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்தளவுக்கு அறிவுத்திறனும் இல்லை.இந்த மூன்று ஆண்டுகளில் அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான வர்த்தக தொடர்புகள் இல்லை என தெளிவாக கூறியுள்ளோம்.

ஒன்றிய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். அவர்கள் யாரிடம் கொள்முதல் செய்கிறார்கள் என்பது தெரியாது. எவ்வளவு மின்சாரம் பெறுவதற்கான தொகையை அந்த நிறுவனத்திடம்தான் கொடுப்போம். எந்த தனியார் நிறுவனங்களுக்கும் கொடுப்பதில்லை. அப்படி எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதைத்தான் தெளிவாக சொன்னோம். குறிப்பாக இந்தியாவிலேயே மிகக் குறைந்த யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் 61 பைசா என்ற அளவில் கொள்முதல் செய்வது தமிழ்நாடு மின்சார வாரியம்தான். குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதும் தமிழகம்தான்.

இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் அரசு மீது ஏதாவது ஒரு புகார்களை சொல்லிவிட முடியாதா, மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை உருவாக்கிட முடியாதா என்பதை பூதக்கண்ணாடி போட்டு சல்லடை போட்டு தேடுகிறார்கள். தேடி தேடி பார்க்கின்றனர். சில முயற்சிகளும் எடுக்கின்றனர். அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. அந்த விரக்தியில்தான் அறிக்கைகள் வருகிறது. அறிக்கைகள் மற்றும் விமர்சனங்களை பார்த்து நாங்கள் ஒரு போதும் அஞ்சுவதும் இல்லை, சிந்தித்ததும் இல்லை. சரியான அறிக்கையாக இருந்தால் அதை நாங்கள் யோசித்து பார்ப்போம், அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘ஜாமீனில் வந்தவர்கள் பாஜவில் அமைச்சராக இல்லையா? 11 பேருல ஒருத்தர்தான் நீங்க’

அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ‘ஜாமீன் அமைச்சர் என்று கூறுகிறார்கள். ஆனால் பாஜாவில் எத்தனை பேர் ஜாமீனில் வந்துள்ளனர். எத்தனை பேர் அமைச்சராக உள்ளனர். வெளிநாட்டுக்கு போய் படித்தோம் எனக் கூறுகின்றனர். அந்த டீமில் சென்றது 11 பேர். அதில், தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ் ரேங்கில் இருக்க கூடிய ரோகினி ஐஏஎஸ்ஸூம் சென்றிருந்தார். ஆண்டுதோறும் இந்த பயிற்சிக்கு குறைந்தது 10 பேர்களுக்கு மேல் செல்கின்றனர். படிக்க சென்ற 11 பேர்களில் மூன்று பேர் ஐஏஎஸ் ஆபிசர், மூன்று பேர் ஐபிஎஸ் ஆபிசர். அந்த டீரெய்னிங்கிற்கு அரசியல்வாதிகளும் செல்வார்கள், பத்திரிக்கையாளர்களும் செல்வார்கள். ஒன்றிய அரசு அவர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது. அந்த பட்டியலில்தான் 11ல் 1. 10ஐ மறந்து விட்டீர்கள் 1ஐ மட்டும் போகஸ் செய்கிறீர்கள். 11ஐயும் போகஸ் செய்தால் நன்றாக இருக்கும்’ என்றார்.

The post அறிக்கைகள் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம் இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதும் தமிழகம்தான்: அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: