சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்: 24 ஆண்டுகள் ஆண்ட அதிபர் அஸாத் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

டமாஸ்கஸ்: உள்நாட்டு கலவரம் நடந்து வரும் சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்ததையடுத்து அதிபர் பஷர் அல் அஸாத் நாட்டை விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்களையடுத்து அங்கு கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. சிரியாவின் அதிபராக இருந்த பஷர் அல் அஸாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம்(எச்டிஎஸ்) என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. அஸாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக தாக்குதல்களை தொடங்கினர். அலெப்போ, ஹமா,ஹோம்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து கைப்பற்றினர். தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வந்த நிலையில், பல இடங்களில் ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்துள்ளனர். இதனால் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தின் எதிர்ப்பை முறியடித்து நேற்று நுழைந்தனர். தலைநகர் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கிளர்ச்சியாளர்கள் தலைநகருக்குள் நுழைந்ததுமே அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதால் பஷர் அல் அஸாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது என சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து நேற்று பேட்டியளித்த சிரியா பிரதமர் முகது காஜி அல் ஜலாலி,‘‘ அதிபர் பஷர் அல் அஸாத் மற்றும் ராணுவ அமைச்சர் ஆசெப் சவ்கத் ஆகியோர் எங்கிருக்கின்றனர் என தெரியாது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்க தயார்’’ என கூறினார். பஷார் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குழுவினர் சிரிய தொலைக்காட்சியில் அறிவித்தனர். சிரியாவில் அஸாத் ஆட்சி கவிழ்ந்ததை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.ஆனால் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது ஏற்று கொள்ள முடியாதது என கூறி உள்ளன.

* இரும்புகர ஆட்சிக்கு முடிவு

பஷர் அல் அஸாத் ஆட்சி கவிழ்ந்ததால் சிரியாவில் 50 ஆண்டு ஒரே குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1971ம் ஆண்டு ஹபீஸ் அல் அஸாத் அதிபராக பதவியேற்றார். சிரியா பாத் கட்சி தலைவரான ஹபீஸ் 29 ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் இருந்தார். அவர் இறந்த பின் 2000ம் ஆண்டு அவரது மகன் பஷர் அஸாத் அதிபர் பொறுப்புக்கு வந்தார். இதில் பஷர் இரும்புகரத்துடன் ஆட்சி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* உள்நாட்டு போரில் 5 லட்சம் பேர் பலி

சிரியாவில் கடந்த 2000 ம் ஆண்டு பஷர் அல் அஸாத் அதிபரானார். 2011ம் ஆண்டில் அரபு நாடுகளான துனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக மிக பெரிய கிளர்ச்சி வெடித்து அங்கு உள்ள ஆட்சிகள் கவிழ்ந்தன. அதே போல் சிரியாவிலும் போராட்டங்கள் நடந்தன. ஆனால் அதை அஸாத் ஒடுக்கினார். அதன் பிறகு உள்நாட்டு போர் ஏற்பட்டது. அதிபர் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சி படைக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன. 14 ஆண்டுகள் நடந்த போரில் நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பாதிப்பேர் அகதிகளாகி ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இந்த போரில் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

* கிளர்ச்சி குழு தலைவர் அல் குலானி

பஷர் அஸாத் ஆட்சிக்கு எதிரான போரை நடத்தி வந்த எச்.டி.எஸ். போராளி குழுவின் தலைவர் அபு முகமது அல் குலானி.இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர். முன்னாள் அல் கொய்தா கமாண்டர் ஆன அல் குலானி தலைமையில் சிரியாவில் புதிய ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வீதிகளில் மக்கள் கொண்டாட்டம்

பஷர் அல் அஸாத் ஆட்சி கவிழ்ந்து டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்தனர். நாட்டின் தலைநகர் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடி வருகின்றனர். சிரியாவின் தேசிய கொடியுடன் அவர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

* அதிபர் மாளிகை சூறை

டமாஸ்கஸில் உள்ள அரசு அலுவலகங்கள் நேற்று சூறையாடப்பட்டன. சிலர் ராணுவ அமைச்சக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். அதே போல் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை எடுத்து செல்லும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

* பஷர் அல் அஸாத் கொல்லப்பட்டாரா?

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் நடத்தி டமாஸ்கஸை கைப்பற்றிய நேரத்தில் சிரியன் ஏர் விமானம் ஒன்று டமாஸ்கஸில் இருந்து புறப்பட்டது என்றும் அதில் பஷர் அல் அஸாத் தப்பி சென்றார். சிரியன் ஏர் விமானம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. பஷர் அல் அஸாத் ரஷ்யா அல்லது ஈரானுக்கு சென்றிருக்கலாம் என விமான கண்காணிப்பு சேவையான பிளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சிரியாவின் கடலோரப் பகுதியை நோக்கிச் சென்ற விமானம் திடீரென யு-டர்ன் செய்து எதிர் திசையில் பறந்து ரேடாரில் இருந்து மறைந்தது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 3,650 மீ உயரத்தில் பறந்த விமானம் திடீரென 1070 மீ உயரத்தில் தாழ்வாக பறந்து பின்னர் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அந்த விமானம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் பிராந்தியத்தில் சென்ற போது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என சிரிய வட்டாரங்கள் ஊகித்துள்ளன.

The post சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்: 24 ஆண்டுகள் ஆண்ட அதிபர் அஸாத் நாட்டை விட்டு தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: