மொழி திணிப்புமூலம் வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!
இதோ நேற்று (5.12.2024) ஒரு நிகழ்வு: புதிய சட்டங்கள் மற்றும் மசோதாக்களுக்கு முழுமையாக ஹிந்தி – சமஸ்கிருதத்தில்தான் பெயரிட்டு முன்மொழியப்படும் என்ற ஒரு விரும்பத்தகாத – வம்பை விலைக்கு வாங்கியுள்ளனர். ஹிந்தி, சமஸ்கிருதம் என்ற நடைமுறை வாழ்வின் புழக்கத்திலேயே இல்லாத – வெறும் பூஜை, புனஸ்காரம், சடங்குகளில் ஓதப்படும் மந்திர மொழியாக மட்டும் உள்ள, 140 கோடி மக்களில் ஒரு சதவிகிதம் பேர்கூட பேசாத ஒரு மொழியை ‘தேவபாைஷ’ என்று உயர்த்தியும், பல நாடுகளில் பல கோடிக்கணக்கில் உள்ள மக்களின் பேசும், எழுதும் செம்மொழி, தமிழ் போன்ற மொழிகளை ‘‘நீச்ச – நீஷ பாஷை’’ என்று இழிவுபடுத்தியும் இன்றளவும் கூறிவரும் நிலைதான் நீடிக்கிறது.
இந்த ‘தேவபாஷை’ என்ற மொழியின் உயர் எஜமானத்துவத்தினை இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே ‘Hindi in Devanagari Script’ என்று புகுத்தி தேவ் – கடவுள் எழுத்து என்று கூறி, ஒரு பெரும் பண்பாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் – ஹிந்தி ஏகாதிபத்தியவாதிகள்! இப்படிப்பட்ட மொழி – பண்பாட்டுத் திணிப்பினை எதிர்த்து, எதிர்க்கட்சியினர் நேற்றும், (5.12.204), இன்றும் (6.12.204) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமே எதிர்க்கிறது என்ற ‘பிராந்திய’ சாயத்தைப் பூசவேண்டாம்!
தமிழ் மண்ணின் தொடர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது இன்றுவரை 87 ஆண்டுகள் போராட்ட வரலாற்றைக் கொண்டது என்பது நினைவிருக்கட்டும்!. பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், திராவிட இயக்கங்களால் மட்டும் எதிர்ப்பு என்று இதற்கு ஒரு ‘பிராந்திய’ சாயமடித்து, ‘‘குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது’’ என்பதற்கு அடையாளமாக, நேற்று (5.12.2024) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசேதாவினை ‘‘பாரதீய வாயுயான் விதேயத்’’ என்ற பெயரில், தெலுங்கு தேச கட்சியைச் சார்ந்த கூட்டணி அமைச்சரான கிஞ்சிரப்பு ராம்மோகன் நாயுடு அவர்கள், மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
அதனை மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சாகரிகா கோஷ் வன்மையாகக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பியுள்ளார். வழக்கம்போல் தி.மு.க. உறுப்பினர்களும் கடுமையான தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்!. மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் வெடிக்க ஆரம்பித்துள்ளது!. தென்னாடு மட்டுமல்ல, பஞ்சாப் மற்றும் வடகிழக்குப் பகுதி அனைத்தும் ஹிந்தி மொழித் திணிப்பை எதிர்த்துத் தங்களது மறுப்பைத் தெரிவித்து வருவதும், மறுக்க முடியாத உண்மையாகும்!.
‘‘ஹிந்தி பேசாத மக்கள்மீது ஹிந்தியைத் திணிக்காதீர்கள்!
எந்த ஒரு மசோதாவுக்கும் ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கவேண்டாம். உடனடியாக இந்த மசோதாவின் பெயரைஆங்கிலத்தில் மாற்றவும்’’ என்று தி.மு.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களும் வற்புறுத்தியுள்ளார். சட்டம் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது; ஆனால், தலைப்பு மட்டும் இப்படி ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தில் அமைப்பது எதைக் காட்டுகிறது?
பச்சையாக நடைபெறும் பண்பாட்டுப் படையெடுப்பு அல்லாமல் வேறு என்ன?
தேசிய மொழி என்று எந்த மொழியும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை!
இந்திய மொழிகள்பற்றி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் (ஆர்டிகில் 344(1) மற்றும் 351படி) (22 மொழிகள் உள்ளன) என்று உள்ளது. ‘‘தலைப்பு மொழிகள்’’ ‘‘Language’’ என்று மட்டும் உள்ளது. தேசிய மொழி என்ற சொல், ஹிந்தி, ‘‘சமஸ்கிருதம்’’ உள்பட எதற்கும் தரப்படவில்லை என்பதன் அடிப்படை என்ன?
எல்லாம் சமமான மொழிகள் என்பதுதானே! பின் ஏன் இந்த மாதிரி தொடர் பண்பாட்டுப் படையெடுப்பு?
பன்மொழிகள், பல கலாச்சாரங்கள், பண்பாடுகள் – பல மதங்கள், பலப் பல என்று பரந்து விரிந்துபட்ட நம் நாட்டின் ஒருமைப்பாடு என்பது எதில் அடங்கியுள்ளது?. ‘‘வேற்றுமையில் ஒற்றுமை’’ (Unity in Diversity) என்பதைக் கடைப்பிடிப்பதன்மூலம் தானே முடியும்.
மொழியைத் திணித்தால் ஏற்படும் விளைவு என்ன?
‘கூட்டுறவு கூட்டாட்சி’யை நடத்துகிறோம் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கட்சிகள், இப்படி ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் அதற்கு நேர் எதிரான, மிகவும் உணர்ச்சிபூர்வமான மொழி, கலாச்சாரப் பிரச்சினையில் இப்படித் தொடர்ந்து செய்தால், யார் பிரிவினைவாதிகள்?. திணித்தால் எவர்தான் ஏற்பர்?. யோசிக்கவேண்டும் மொழித் திணிப்பாளர்கள் – பண்பாட்டுப் படையெடுப்பாளர்கள்!
தமிழ்நாடு மட்டும்தானே எதிர்க்கிறது என்று இதனை அலட்சியமாகக் கருதாமல், மக்களாட்சியின் மாண்பையும், விழுமியத்தைக் காப்பாற்றி – உள்ள யதார்த்தத்தையும் உணர்ந்து, திணிப்பு முயற்சிகளைக் கைவிடவேண்டும். மொழி உணர்வும், பண்பாட்டு உரிமையும் மக்களிடையே நெருப்புப் போன்றவை – அவற்றுடன் விளையாடுவது புத்திசாலித்தனம் அல்ல, அல்லவே அல்ல!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post புதிய சட்டம், மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத பெயர்களைச் சூட்டுவதை ஏற்க முடியாது: கி.வீரமணி கண்டனம்! appeared first on Dinakaran.