ராஜகோபுர மனசு (வல்லாள கோபுரக் கதை)

பகுதி 10

தங்கை சொன்ன கனவைக்கேட்டு அதிர்ந்த மூத்தராணி மல்லம்மா தேவி, சிலநொடிகளில் சுதாரித்துக் கொண்டு, “சிலகனவுகளுக்கு அர்த்தமில்லை சல்லம்மா” என சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில், “கனவுகள் சிலசமயம் எதிர்காலத்தை பிரதிபலிக்கும்’’ என்பதாக சிரித்த விதி, அதற்கானச் செயலை சப்தமின்றி ஆரம்பித்தது. கோபுரக் கட்டுமானப்பணி நடக்கின்ற இடத்திற்கே, அவசரவோலையென முத்திரையிட்டு காம்ப்லித்தேசம் அனுப்பியிருந்த கடிதத்தைப் பிரித்து, படிக்கச் சொன்ன மன்னர் வீரவல்லாளன், சட்டென “ஒரு நிமிடம், இங்குவேண்டாம்” என மாதப்பதண்ட நாயகரைத் தடுத்தார்.

திரும்பி, இரவீந்திரப் பெருந்தச்சனிடம், “வருகிறேன் பெருந்தச்சரே, அவசரமெனில், எப்போது வேண்டுமானாலும், நீங்கள் என்னைவந்து பார்க்கலாம்” என கூறிவிட்டு, விடைபெற்றுக் கொண்டவர், கடிதத்திலிருக்கும் முழுவிவரத்தினை அறிந்துகொள்ள, மன்னர் வீரவல்லாளன், தளபதியுடன் வேகமாக தனியேநகர்ந்தார். (காம்ப்ளித்தேசம் தற்போதைய கர்நாடகத்தின் துங்கபத்திரை ஆற்றங்கரையின் ஒரு நிலப்பகுதி)“காம்ப்லித்தேசத்து மன்னன், காம்ப்லித்தேவனொன்றும் லேசுபட்டவனில்லை.

ஆனானப்பட்ட, வடக்கத்தான் படைகளையே தன்எல்லைக்குள் நெருங்கிவிடாதபடிக்கு, விரட்டியடித்த வீராதிவீரன். என்சிற்றப்பனான ராமநாதன், அவனிடம் இழந்தப்பகுதிகளை நான் மீட்கச் சென்றபோது, என்னையே ஒருமுறை தோற்கடித்த அசகாயசூரன். அப்படிப்பட்டவன் எனக்கு கடிதமனுப்புகிறானென்றால் முக்கியக்காரணம் இல்லாமலிருக்காது” என மாதப்பதண்ட நாயகரிடம் கூறிக்கொண்டே, தலவிருட்சமான மகிழம்பூமரத்தின் மேடையைநோக்கி நடந்தார்.

தனியே நகர்ந்த, மன்னருக்கும்,தளபதிக்கும், மகிழம்பூ மேடைக்கருகே அதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்துவிட்டு படைவீரர்கள் தூரமாயொதுங்கி, அதேநேரத்தில் பாதுகாப்பாக நின்றார்கள். மன்னர் வீரவல்லாளன், மாதப்பதண்ட நாயகரை வாசிக்கச் சொல்ல, தாமிர உருளைலிருந்த நீளமானக்கடிதத்தை வெளியேயெடுத்து, படைத்தளபதி மெல்லிய குரலில் வாசிக்க ஆரம்பித்தார்.
“மேன்மைப் போருந்திய ஹொய்சாலதேசத்து மன்னருக்கு, காம்பிலித்தேசமாளும் காம்பிலித்தேவனின் பெருவணக்கம். மன்னர் வீரவல்லாளருக்கு மேலும் மேன்மையுண்டாவதாக.

தங்கள்தேசத்தில், மேலும் ஈசன்கருணை பரவட்டும்.” “இது தென்னகத்திற்கு போறாதக்காலம். இதுவரை வடக்கில்மட்டும் மையம்கொண்டிருந்த சுல்தானின் சனியன்படைகள், சமீபமாக தெற்கையும் நாசம் செய்துகொண்டிருப்பது, அனுபவத்தில் தாங்களறிந்த ஒன்றே. போர்நெறிகளைப்பேணாத சுல்தான் படைகளிடம், ஒற்றுமையற்ற அரசுகள் ஒவ்வொன்றாக வீழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதே சமீபத்திய நிதர்சனம். இதில் நானும் விதி விலக்கல்ல.” “ஏற்கனவே ஒருமுறை, அனைத்து தேசத்து அரசர்களையும் ஒன்றிணைக்க நீங்கள் முயற்சித்தபோதே, எல்லோரும் ஒன்றுபட்டு நின்றிருந்தால், டெல்லி சுல்தானின் படைகளை, எப்போதோ இங்கிருந்து விரட்டியடித்திருக்கலாமென தோன்றுகிறது. ஆனால், காலம், தாமதமாகத்தான் இழந்தபின்தான், எல்லாவற்றையும் புரியவைக்கிறது. எனக்கும் அப்படித்தான்.

உங்களோடு ஒன்றுபட்டு நின்றிருக்கலாமென்பது, இந்த ஒருமாதமாக கோட்டையை முற்றுகையிட்டு நிற்கிற சுல்தானின் படைகளை பார்க்கிறபோதுதான், எனக்குப்புரிகிறது.” “தென்னகத்து அரசர்கள் அனைவரும், தொடர்புகொள்ள முடியாதபடிக்கு, ஆளாளுக்கு எதிர்திசையை நோக்கி ஓடியபடியே இருந்ததால்தான், இப்போது ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ள முடியாமல், எல்லோரும் தனித் தனியாளாக நிற்கிறோமென்று” கலங்கியபடி என்மூத்த அமைச்சரொருவர் கூறியது, உண்மையில் சத்தியம்.

காலம் கடந்துவிட்டது. ஆனாலும் சொல்கிறேன். மீண்டும் எல்லோரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை தொடருங்கள். நானில்லாதுபோனாலும், காம்பிலித்தேசம் உங்கள்முயற்சிக்கு துணைநிற்கும்.” “சரி, விஷயத்திற்கு வருகிறேன். மூன்றுமாதங்களுக்குமுன், டெல்லி சுல்தானையெதிர்த்து கலகம்செய்த குல்பர்காவின் ஆளுநர், மேதகு பஹாவுதீன் குர்ஷாப், என்னிடம் தஞ்சமடைந்திருக்கிறார். நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தன்னை எதிர்த்துநின்ற காரணத்தால், அவரை கைதுசெய்திழுத்து வரும்படி, டெல்லி சுல்தான் அனுப்பிய படைகளிடமிருந்து தப்பியவர், குடும்பத்துடன் என்னிடம் அடைக்கலம் அடைந்திருக்கிறார்.”

`‘காம்ப்லித்தேசத்தின் செயல்பாடுகளை உளவுபார்த்து மேலிடத்திற்கு அனுப்பியவர் என்கிறமுறையில், பஹாவுதீன் குர்ஷாப் எனக்கும் எதிரிதான். என்றாலும், அண்டியவரை ஆதரிக்கும் ஷத்ரிய தர்மப்படி சுல்தானுக்கு எதிரியாகிவிட்ட அவரை ஆதரித்தால் என்னாகுமென தெரிந்திருந்தும், நான் அவருக்கு அடைக்கலம் அளித்திருக்கிறேன்.”தஞ்சமடைந்த பஹாவுதீனை ஒப்படைத்துவிடும்படி நேரடியாகவே என்னிடம் கேட்ட சுல்தானிடம், நான் ஒப்படைக்க மறுத்துவிட்டதால், சுல்தானின்படைகள் காம்ப்லிதேசத்தை முற்றுகையிட்டுள்ளன. ஏற்கனவே இருமுறை நடந்த முற்றுகைப்போரில், காம்ப்லித்தேசத்துப்படைகளிடம் மோசமாய் அடிபட்டு தப்பியோடிய சுல்தானின்படைகள், இம்முறை பலமானமுறையில் காம்ப்லிதேசத்தினை தாக்கியுள்ளன.

“சுல்தானின் படைகளின் இடைவிடாத தாக்குதல்களால், இம்முறை சற்று மிரண்டுதான் போயிருக்கிறோம். ஒருமாதகாலமாக, கோட்டைவாசலை முற்றுகையிட்டுள்ள டெல்லிப் படைகளை, எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கிறோம். மோசமான இச்சூழலை எமது கோட்டைக்குள்ளிருந்தபடியே எதிர்கொண்டபடியிருக்கிறோம். எம்வீரர்களும், எம்மக்களும், மனத்தால் மிகவும் சோர்ந்து போயிருக்கிறார்கள். எம்பெண்கள் எதிரிபடைகளிடம் சிக்காதிருக்க, வேறொருமுடிவை கொண்டிருக்கிறார்கள்” முதல் கடிதம் முடிந்து, அடுத்தக் கடிதத்தை மற்றொரு உருளையிளிருந்துருவி, மாதப்பதண்ட நாயகர் பதட்டத்துடன் வேகமாகப் படித்தார்.

“இப்படியானச்சூழலில் என்னிடம் தஞ்சமடைந்தவர்கள், இங்கிருப்பது சரியில்லையென்பதால், அடைக்கலமடைந்தவர்களின் பாதுகாப்பினைக்கருதி, தங்களிடமனுப்புகிறேன். இதற்கு தங்கள் ஒப்புதலையறியும் சூழல்கூட, இப்போதைக்கு எனக்கில்லை. ஆனால், நம்பிவந்து அண்டியவரை பாதுகாக்கிற ஷத்ரிய தர்மத்தை, நீங்களும் கடைப் பிடிப்பவர் என்கிற நம்பிக்கை எனகிருப்பதால், என்னை நம்பிவந்தவர்களை, உங்களிடம் அனுப்புகிறேன். குல்பர்க்கா ஆளுநரையும், அவர் குடும்பத்தையும் ஆதரித்துகாப்பாற்றுங்கள். இது என்சிரம் தாழ்ந்து, நான் உங்களிடம் வைக்கும் கோரிக்கை.

“ஆனால், இதிலும் தங்களுக்கொரு சிக்கலுண்டு. இப்போதைய இக்கட்டான சூழலில், அவகாசம் குறைவாக உள்ளதாலும், இங்கிருந்து உங்களின் புதியதலைநகரை இலக்காக வைத்துத்தப்பித்தால், பஹாவுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிரிப் படைகளிடம் சிக்கிக் கொள்ளும் அபாயமிருப்பதாலும், அவர்களின் பாதுகாப்புக்கருதி, மிகவும் ரகசியமாக எமது தேசத்திலிருந்து அவர்களை தப்பிக்கவைத்து, எங்கள் தலைநகருக்கு மிகவும் அருகாமையில் தங்களின் முந்தைய தலைநகரமான துவாரசமுத்திரத்திற்கு அனுப்பிவைக்கிறேன்.

அங்கிருந்து அவர்களைமீட்டு ஆதரித்து பாதுகாக்குமாறு காம்ப்லித்தேசத்து வேண்டுகோளாக விண்ணபிக்கிறேன்.” (துவாரசமுத்திரம் தற்போதைய கர்நாடகத்தின் பேலூர்)
அன்றே தங்களது அனுபவ அறிவை புரிந்து நடந்திருந்தால், இன்று இந்த நிலைமை என் தேசத்திற்கு வந்திருக்காது. பரவாயில்லை. இம்முறை காலம் சாதகமாயிருந்ததெனில், ஒற்றுமைக்கான உங்களது முயற்சிக்கு, இம்முறை பக்கபலமாய் நான் துணைநிற்பேன். ஹேமகூடமலை வாழ் விருபாக்ஷிதேவ ஈசனின் கருணையுண்டெனில், விரைவில் நாம் சந்திப்போம்.

இங்ஙனம். எப்போதும் ஈசன்பாதமே சரணமெனக்கொள்ளும், காம்ப்லித்தேவன். செய்தியை முழுமையாக வாசித்துவிட்டு, அதிர்ச்சியோடு நிமிர்ந்த மாதப் பதண்ட நாயகரைப் பார்த்து, மன்னர், “இந்தச் செய்தி, எப்போது நமக்கு அனுப்பப்பட்டிருக்கிறது?” என்றார். மாதப் பதண்டநாயகர் பதில்சொன்னார். “செய்தி கொண்டுவந்தவன் கணக்குப்படி, இரண்டுநாளைக்கு முன்பு”
“ஓ, இரண்டுநாள் ஆகிவிட்டதா” என்று மன்னர் நெற்றிக்கீறி யோசித்த மன்னர், “நம் துவார சமுத்திரத்திலிருந்து ஏதேனும் சேதி வந்திருக்கிறதா மாதப்பதண்ட நாயகரே?
“இல்லையரசே” “இப்போது என்னசெய்யலாம்?

“இதுமுட்டாள்தனம் அரசே. அபயமென வந்தவர்களை துவாரசமுத்திரத்திற்கு அனுப்பி வைப்பதென்பது, எப்படிப்பட்ட முட்டாள்தனம். பேர்தான், அதற்கு துவாரசமுத்திரமே தவிர, இப்போதது துண்டுநிலம். வெறும் ஏழு கிராமங்களைக் கொண்ட துண்டு நிலம். பாதுகாப்பு வீரர்கள் குறைவாகவுள்ள அங்குபோயா அனுப்பி வைப்பது? அதுவுமில்லாமல், நம் அனுமதி கேட்காமல், நம் ஒப்புதல் பெறாமல், அவரிடம் அடைக்கலம் வந்தவரை நம்மிட மனுப்புகிறாரே. இது எலியின்வாலில் கட்டிக் கொண்ட தவளையின் நிலைமையல்லவா, நம்மை கொண்டுபோய்விடும்.”

“உண்மைதான். இதுகூட அறியாத முட்டாளாகவா காம்ப்லித்தேவன் இருப்பான்? எனக்கும்தான் புரியவில்லை.”“ஒருவேளை, இது காம்ப்லித்தேவனின் சதியாகயிருக்குமோ?’”“என்னப் பேசுகிறீர்கள் தளபதியாரே. அதற்கு வாய்ப்பேயில்லை. போர்க்களத்தில் காம்ப்லித்தேவனை நேரடியாக சந்தித்தவன் என்கிறமுறையில் கூறுகிறேன். காம்ப்லித்தேவன், அத்தகைய இழிச்செயல் செய்கிற இனமில்லை. அதற்குப் பேசாமல், தஞ்சமடைந்தவர்களை, டெல்லிப் படைகளிடமே, ஒப்படைத்துவிட்டு, இப்படியானநிலையை அவன் தவிர்த்துவிடுவானே. நம்மிடமேன் அனுப்பவேண்டும். அதுமில்லாமல் கடிதத்திலுள்ள உண்மைசுடுகிறது தளபதியாரே. இப்போதென்ன செய்யலாமென்பதை மட்டும் யோசித்து, அதைக்கூறுங்கள்.”

“முதலில், மக்களின் பாதுகாப்பிற்காக, துவாரசமுத்திரத்திற்கு நம் படைவீரர்களை அனுப்பவேண்டும்.” மன்னர் வேகமாக மறுத்தார். “இங்கிருந்து நம்படைகள் உடனே நகர்ந்தால், சந்தேகம் வரும். ஏற்கனவே மதுரை சுல்தானால் நாம் கண்காணிக்கப் படுகிறோமென்பது, தங்களுக்கும் தெரிந்த ஒற்றுத்தகவல்தானே. அதனால் இப்போதைக்கு அங்கிருக்கும் வீரர்களை சற்று எச்சரிக்கையாக மட்டும் இருக்கச் சொல்லுங்கள்.”

(தொடரும்)

குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு (வல்லாள கோபுரக் கதை) appeared first on Dinakaran.

Related Stories: