அர்ரஹ்மான் – கருணை மிக்க இறைவன்

இறைவனின் அழகிய திருப்பெயர்களில் ஒன்று அர்ரஹ்மான்- (கருணை மிக்க இறைவன்) என்பது. “அர்ரஹ்மான்’ எனும் பெயரில் இறுதிவேதம் குர்ஆனில் ஓர் அத்தியாயமே (55) உண்டு. இறைவனின் அளவற்ற அருட்கொடைகள் பற்றி அற்புதமாகப் பேசும் அத்தியாயம் அது.முஸ்லிம்கள் எந்தச் செயலைத் தொடங்கும்போதும் பிஸ்மில்லாஹ் சொல்லித்தான் தொடங்குவார்கள். அதன் முழுவடிவம் – “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” (அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய இறைவனின் திருப்பெயரால்…) இந்தத் தொடக்கச் சொற்றொடரிலும் இடம் பெற்றிருக்கும் சொல்தான் அர்ரஹ்மான். இறைவனின் அளவற்ற அருட்பண்பைச் சுட்டும் இந்தச் சொல்லை வேதத்தின் பல இடங்களிலும் இறைவன் குறிப்பிடுகிறான். வியத்தகு முறையில் “மர்யம்” எனும் ஒரே அத்தியாயத்தில் 15 தடவை இந்தத் திருப்பெயர் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளது.

1. அன்னை மர்யத்தின் எதிரில் வானவர் தோன்றியதும் மர்யம் கூறினார்: “உம் விஷயத்தில் ரஹ்மானிடம் – கருணைமிக்க இறைவனிடம் பாதுகாவல் கோருகின்றேன். (19:17)
2.“ரஹ்மானுக்காக – கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கிறேன்.” (19:26)
3. “திண்ணமாக ஷைத்தான், ரஹ்மானுக்கு – கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்பவன் ஆவான்.” (19:44)
4.“என் தந்தையே! கருணை மிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகிவிடுவீர்களோ……என நான் அஞ்சுகிறேன்.” (19:45)
5.இவர்களின் நிலைமை எவ்வாறு இருந்ததெனில் கருணை மிக்க இறை வனின் திருவசனங்கள் இவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால் அழுதுகொண்டே சிரம் பணிவார்கள். (19:58)
6.கருணை மிக்க இறைவன் தன் அடியார்களுக்கு அவர்கள் காணாத நிலையில் அளித்துள்ளவாக்குறுதியான சுவனபதிகள் இருக்கின்றன.(19:61)
7. அவர்களில் எவன் கருணை மிக்க இறைவனுக்கு மாறு செய்வதில் தீவிரமாக இருந்தானோ அவனை ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் தனியே பிரித்து விடுவோம். (19:69)
8. இவர்களிடம் கூறுங்கள்: எவர்கள் வழிகேட்டில் வீழ்ந்திருக்கிறார்களோ அவர்களுக்குக் கருணை மிக்க இறைவன் கால அவகாசம் அளிக்கிறான். (19:75)
9…..அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கிறானா?(19:78)
10. கருணை மிக்க இறைவனின் திருமுன் இறையச்சமுள்ள மக்களை விருந்தினர்கள் போல் ஒன்று சேர்ப்போம். (19:87)
11. கருணை மிக்க இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான் என்று அவர்கள் கூறுகின்றனர். எத்தகைய அபத்தமான விஷயத்தை இட்டுக் கட்டுகிறீர்கள். (19:88)
12. இப்படி கருணை மிக்க இறைவனுக்கு சந்ததி இருக்கிறது என்பது கொடூரமான பேச்சாகும். (19:91)
13. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணை மிக்க இறைவனுக்கு ஏற்றது அல்ல. (19:92)
14. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் அடிமைகளாய் கருணை மிக்க இறைவனின் திருமுன் வரத்தான் போகின்றனர். (19:93)
15.எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள்புரிகிறார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான். (19:96)

– சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“நீங்கள் ‘அல்லாஹ்’ என்று அழைத்தாலும் சரி, ‘ரஹ்மான்’ என்று அழைத்தாலும் சரி; நீங்கள் எந்தப் பெயரைக் கூறியும் அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம்.”
குர்ஆன் 17:110)

The post அர்ரஹ்மான் – கருணை மிக்க இறைவன் appeared first on Dinakaran.

Related Stories: