அனந்தனுக்கு 1000 நாமங்கள்

89. விச்வரேதஸே நமஹ

(Viswaretase namaha)
கடலூருக்கு அருகே உள்ள திருவஹீந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்தில் வேதாந்த தேசிகன் பல வருடங்கள் எழுந்தருளியிருந்தார். அங்கே கோவில்கொண்டிருக்கும் தெய்வநாயகப் பெருமாளைக் குறித்துப் பல துதிகளும் இயற்றினார்.ஒருநாள் தெய்வநாயகப்பெருமாளைத் தரிசிக்கச் சென்ற தேசிகன் பெருமாளைப் பார்த்து, “தெய்வநாயகா! நான் ஒரு திருடன், அதுவும் சாதாரணத் திருடன் அல்ல, பெரிய திருடன். எப்படியென்னில், இந்த ஜீவாத்மா உன்னுடைய சொத்து. உன்னுடைய ஆனந்தத்துக்காகவும், உனக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவை அனைத்து ஜீவாத்மாக்களும். உனக்கே உரியதான ஜீவாத்மாவை ‘அடியேன்’ என்றல்லவோ குறிப்பிட்டிருக்க வேண்டும்! அப்படிச் செய்யாமல், நான் எனக்கே உரியவன் என்ற எண்ணத்தில் நான் என்றல்லவோ கூறிவிட்டேன்!

உனக்கே உரித்தான ஒன்றை எனது என்று கூறுவது பெரிய திருட்டுத்தனம் இல்லையா? அது திருட்டுத்தனம் என்பதையும் உணராமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து விட்டேனே. சரி, போகட்டும்! இப்போது உணர்ந்தேன், திருந்தினேன். உன் திருவடிகளே கதி என்று உன்னிடம் வந்து விட்டேன். என்னை ஏற்றுக்கொண்டு நீ காத்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.உடனே தெய்வநாயகப் பெருமாள், “தேசிகரே! உங்கள் கவிதையும் கருத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. அதற்காக உங்களை ஏற்றுக்கொண்ட அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லையே!” என்றார்.தேசிகன் அதற்கு, “இல்லை! நீ ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். உன் திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பு ஒன்று நழுவிக் கீழே விழுந்தால், அந்தச் சிலம்பு தானாக உன்னைத் தேடி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பாயா? அல்லது நீ அந்தச் சிலம்பைத் தேடிச் செல்வாயா?” என்று கேட்டார்.

“நான்தான் தேடிச்சென்று சிலம்பைக் கண்டுபிடிப்பேன்!” என்றார் இறைவன்.“ஏன் இத்தனை நாள் என்னைத் தேடி வரவில்லை என்று அந்தச் சிலம்பிடம் சண்டையிடுவாயா?” என்று கேட்டார் தேசிகன்.“அதெப்படி முடியும்? உடையவனான நான்தானே உடைமையைத் தேடிச்செல்ல வேண்டும். உடைமை எப்படி என்னைத் தேடி வரும்?” என்றார் இறைவன்.“அதே போலத் தான் அடியேனும் உன்னுடைய உடைமை, உன் சொத்து. நீ ஸ்வாமி, உடையவன். இத்தனை நாள் அடியேன் உன்னைத் தேடி வரவில்லை என்றெண்ணி என்னை நீ ஒதுக்கலாகாது. உடையவனான நீ உன் உடைமையான அடியேனை ஏற்றருள வேண்டும். அந்தச் சிலம்பை எடுத்து உன் திருவடிகளில் அணிந்துகொள்வது போல அடியேனையும் உன் திருவடி நிழலில் இணைத்துக் கொள்ள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் தேசிகன்.

இவரது வாக்குவன்மையால் வியந்த தெய்வநாயகன் தேசிகனைப் பார்த்துப் புன்னகை பூத்தார்.தனக்கும் இறைவனுக்கும் நடைபெற்ற இந்த உரையாடலைத் ‘தேவநாயக பஞ்சாசத்’ என்ற நூலில் ஸ்லோக வடிவில் தேசிகன் வழங்கியுள்ளார்.“ஆத்மாபஹார ரஸிகேந மயைவ தத்தம் அந்யைரதார்யம் அதுநா விபுதைகநாதஸ்வீக்ருத்ய தாரயிதும் அர்ஹஸி மாம் த்வதீயம் சோரோபநீத நிஜநூபுரவத் ஸ்வபாதே”இதில் தேசிகன் கூறியதுபோல, அனைத்து ஜீவாத்மாக்களும் பரமாத்மாவாகிய திருமாலுடைய உடைமைகள். உடையவரான அவருடைய ஆனந்தத்துக்காகவும், அவருக்குத் தொண்டு செய்வதற்காகவுமே இவை அனைத்தும் ஏற்பட்டவை.விச்வம் என்றால் உலகம். விச்வத்தில் உள்ள அனைத்தும் அவரை உகப்பிக்கவே ஏற்பட்டபடியால் திருமால் ‘விச்வரேதஸ்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 89-வது திருநாமம்.“விச்வரேதஸே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திருமாலுக்கு வழுவிலாத் தொண்டு செய்யும் பேறு பெறுவார்கள்.

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள் appeared first on Dinakaran.

Related Stories: