மாற்றங்கள் ஏற்படுத்தும் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர்!

புராணச் சிறப்பு- தென்னாடுடைய சிவத்தலங்களுள் பலவற்றுள் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டத்தில் அமைந்துள்ளது திருவிரிஞ்சிபுரம். சுருக்கமாக விரிஞ்சிபுரம் என்றும் அழைக்கின்றனர். விரிஞ்சன் என்னும் சொல் பிரம்மதேவனை குறிக்கும். திருவண்ணாமலையில் இடம் பெற்றுள்ள ஈசனை அன்னத்தின் உருக்கொண்டு அறிய இயலாத பிரம்மன் திருவிரிஞ்சையம்பதியில் சிவநாதர் என்ற அர்ச்சகருக்கும் நயன நந்தினி என்ற உத்தமிக்கும் சிவசர்மன் என்ற பாலகராக அவதரித்து. இறைவனது இன்னருளால் எல்லோரும் வியக்க சிவதீட்சை பெற்று சுவாமிக்கு பூஜை செய்யுங்கால் திருமுடி எட்டாத காரணத்தினால் அடிய வர்களுக்கும், இரங்கும் எம்பெருமான் மார்க்கபந்தீஸ்வரர் பாலகனுக்கு திருமுடி சாய்த்து கொடுத்த திருத்தலம் இன்றளவும் வியந்து போற்றுதற்குரியது. பட்டினத்தடிகள், அருணகிரிநாதர் ஆகியோர் பாடிப்பரவி சிவ புண்ணியம் பெற்ற புகழ்மிக்க, திருத்தலம் திருவிரிஞ்சிபுரம் அருள்மிகு மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர்.

இவ்விறைவன் தனபாலன் என்ற வணிகனுக்கு வேடுவராய் வழித்துணையாக வந்தருளியதால், வழித்துணை நாதர், விரிஞ்சை விமலர், மார்க்கசாயர், கௌரீஸ்வரர் (கௌரி தவம் இருந்த தலம்) பிரம்மபுரீஸ்வரர், விஷ்ணுஈசர், முடிவளைத்தவர், இகபரநாதன் போன்ற திருநாமங்களும் உண்டு. உற்சவர் சோமஸ்கநதர், இறைவி அருள்மிகு மரகதாம்பிகை. இறைவி பார்வதி தவக்கோலத்திலும். இறைவன் சுயம்பு உருவிலும் இருந்து அருள்வதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோயில் ‘வரதட்சணை கொடுமை’ குறித்த கல்வெட்டு சிறப்பு பெற்றுள்ளது. பொதுவாக சிவனுடைய மற்றும் பெருமாளுடைய திருவுருவங்களும், கல்தூண்களில் கலந்து காணப்படுகிறது. வனவிலங்கு சிற்பங்களும், கேளிக்கை சிற்பங்களும் அதிக அளவில் காணப்படுகிறது. அபரிமிதமான தொழில்நுட்பம் கூடிய பெரிய கற்சிற்பங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் காலம் காட்டும் சூரிய ஒளிகாட்டி;கடிகாரம்’ ஒன்று உள்ளது. பாலாறும் இக்கோயிலின் தீர்த்தமாகும். பிரம்மதேவர் காயத்ரி தேவியுடன் எம்பெருமானை வேண்டி செய்த வேள்வியால் இந்த நதியில் பால்பெருக்கெடுத்து ஓடிய புராணச் சிறப்பும் உண்டு. அந்த நாள் முதல் இந்நதிக்கு பாலாறு என்னும் பெயர் ஏற்பட்டது என்பர்.

பகலவனின் ஒளிகதிர்கள். பங்குனி மாதத்தில், கருவறை வரை சென்று, வழித்துணை நாதரைத் தழுவுவதால்; ‘பாஸ்கரத்தலம்’ என்றும் இதற்கு பெயர் உண்டு.

சிம்மக்குளம் நீராடல் சிறப்பு– திருக்கோயிலில் அமைந்திருக்கும் சிம்மக்குளத்தில், பெண்கள். கார்த்திகை கடைசி ஞாயிறு அன்று நீராட தம்மைப் பிடித்துள்ள தீக்காற்று நீக்கமடையவும், மழலை வரம் வேண்டியும், ஈரத்துணியுடன், கோயிலின் மண்டபத்தில் படுத்துறங்குவதும், ‘நற்சொப்பனம்’ கண்டு விரைவில் கருத்தரிக்கும் பாக்கியம் பெறுவதும், மக்களின் கூற்றாக உள்ளது. ‘சிம்மக்குளத்தில் நீராடி சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்’! என்று இவ்வட்டாரப் பெரியோர்கள் பெண்களை வாழ்த்துவர். சிம்ம தீர்த்தத்தில் மூழ்கும் ஆண், பெண் இருபாலருக்கும் பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு தீவினைகள் யாவும் விலகி இன்பமாக வாழ்வார்கள் என்பதும் ஐதீகம்.

பரிவாரத் தெய்வங்கள்– ஏரம்ப விநாயகர், சொர்ண கணபதி, பிச்சாண்டீஸ்வரர் உற்சவர், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை, காசிலிங்கம், செல்வ விநாயகர், சண்டிகேஸ்வரி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர், கால பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், சூரியர், 108 லிங்கம் ஆகியவை சுற்றி உள்ளன.

துவார பாலகர், நால்வர், பொல்லாப் பிள்ளையார், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், நர்த்தன விநாயகர், தட்சினாமூர்த்தி, லட்சுமி-சரஸ்வதி, சுந்தரேஸ்வரர், வாசுதேவ பெருமாள், துர்க்கை அம்மன் ஆகிய சந்நதிகள் உட்பிராகாரத்தில் அமைந்துள்ளன.

கோயில் அமைப்பு– எட்டுத்திக்கிலும் மண்டபங்கள், மதிலைச் சுற்றி நான்கு புறமும் தேரோடும் வீதிகள் என்று நகர அமைப்புக் கலையின் இலக்கணங்கள் அத்தனையும் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிய இராஜகோபுரம் 110 அடி உயரமும். 7 நிலைகளும், 9 கலசங்களும் கொண்டு கம்பீரமாகத் திகழ்கிறது. வெளிமதில் வரை ஐந்து பிராகாரங்கள் உள்ளன. வெளிமதில் பிராகாரத்தில், பிரம்மதேவன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. கொடிமரம் சுமார் 54 அடி உயர செப்புக் கவசத்துடன் கூடியது. அடி பீடம் பித்தளைக் கவசம் பதிக்கப்பட்டது. திருக்கோயில் பிராகாரத்தில், இரண்டு பிரசித்தி பெற்ற மண்டபங்கள் உள்ளன. அவற்றில் தென்பகுதியில் கல்யாண மண்டபம், அழகிய சிற்பங்கள், தலவரலாற்றின் புடைப்புச் சிற்பங்களும், வடபகுதியில் வசந்த மண்டபமும் உள்ளது. இத்திருக்கோயில் ஒரு சிங்கத்தின் வாய்வழியாக நுழைந்து செல்லும் முறையில் அமைக்கப் பெற்ற நடைபாதைக் கிணறாகும். திரிசூலத்தால் நிறுவப்பட்ட சூலதீர்த்தம் கோயிலின் அருகில் உள்ளது.

திருவிழாக்கள்– சித்திரை பௌர்ணமி வசந்த விழா, வைகாசி விசாக உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடி தேரோட்டம், ஆடிப்பூரம். ஆவணி விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, பாரி வேட்டை, ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம், பிரதோஷம், மகா சிவராத்திரி போன்றவைகள் சிறப்பான திருவிழாக்களாகும்.

அமைவிடம் – வேலூரிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம். நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

புதுகை.பொ.ஜெயச்சந்திரன்

The post மாற்றங்கள் ஏற்படுத்தும் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர்! appeared first on Dinakaran.

Related Stories: