‘‘அம்மை காண்”


‘‘காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனோ வா ப்ரகருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
(ஸ்ரீமத்) நாராயணயேதி ஸமர்ப்பயாமி’’

என்பது ஸ்ரீமத் பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தம், இரண்டாம் அத்தியாயத்தின் முப்பத்தியாறாவது ஸ்லோகம்.‘‘உடலினால், வாக்கினால், மனத்தினால், மற்ற இந்திரியங்களால், புத்தியால், சித்தத்தால், தனக்கு விதிக்கப்பட்ட எந்தெந்த கர்மாவைச் செய்தாலும் அதையெல்லாம் பரமாத்வான ஸ்ரீமந் நாராயணனுக்கே என்று அர்ப்பணம் செய்ய வேண்டும்’’ என்பதற்குப் பொருளாக வாழ்ந்தவர் பாபாவின் சபரி, பாபாவின் ராதை என்று சாயி பக்தர்களால் அழைக்கப்படும் அம்மை ஸ்ரீ ராதாகிருஷ்ணமாயி.

நானா சாஹேப் சாந்தோர்கர் வழிகாட்டுதலின் படி சுந்தராபாயி பண்டரிபுரத்திலிருந்து சீரடிக்கு வந்து பாபாவைத் தரிசித்தார். அப்பொழுது பாபா பீதாம்பரம் தரித்த சுந்தர ஸ்வரூபனாக காட்சி தந்தார். ஒரு கணம் முரளிதரனாக ‘வ்யத்யஸ்த’ பாதனாக (இடது பாதம் ஊன்றி வலது பாதம் விலகியிருக்க), மறுகணம், ‘ஸமன்யஸ்த’ பாதனாக (இரு கால்களையும் ஸமமாக ஒரு சேர செங்கல்லில் ஊன்றியிருக்க) விட்டலனாகக் காட்சி தந்தார்.

அந்தக் காட்சியின் பரவசத்தில், சுந்தராபாயி ‘சாகர ராக்கோ ஜீ மனே சாகர ராக்கோ ஜீ’’ எனும் மீராவின் அற்புத கீதத்தை இசைக்கிறார். பிரபுஜி! என்னை அடிமையாக்கி உன் பணியில் ஈடுபடுத்து. பிருந்தாவனத்தின் கொடி வீடுகளில் மலர்த்தோட்டம் அமைப்பேன். தினமும் எழுந்ததும் உன்னையே காண்பேன். அதற்கு மேலும் ஜனாபாயி பாடிய அபங்கங்களை தொடர்ந்து பாடுகிறார் சுந்தராபாயி. பாபா அசையாமல் அமர்ந்திருக்கிறார். தான் கொண்டு வந்திருந்த கிருஷ்ணனின் விக்ரஹத்தை பாபாவின் பாதங்களில் வைத்து வணங்கி நின்றார்.‘‘ராதா கிருஷ்ணி! வந்தாயா? வா, வா. நீ கிருஷ்ணனை விட்டுப் பிரியாததால் உனக்கு இந்தப் பெயரிட்டேன். ராமகிருஷ்ணி என்றும் கூப்பிடுவேன். நீ இங்கேயே
இருக்கலாம்’’ என்றார் பாபா.

‘‘சாலாவிற்குப் போய் அங்கேயே இரு’’. சாலா என்பது அப்துல் பாபாவின் குடிசைக்குப் பக்கத்திலுள்ள குடிசை. அந்த இடத்தில் தான் சுந்தராபாயியை தங்க வைத்தார் பாபா. ‘சாலா’ என்றால் பள்ளிக்கூடம். அதற்கேற்றாற் போல் அது சுந்தராபாயியின் வரவால் பக்தி, ஞானம், யோகம் கற்பிக்கும் கல்விக் கூடமாக மாறியது என்று சொல்ல வேண்டும். அதுதான் ராதாகிருஷ்ணமாயி அம்மை வசிக்கும் சாலா என்னும் பள்ளிக் கூடம்.

நமது பரமார்த்திக வாழ்வில் இருக்கும் இரு பெரிய தடங்கல்கள் பெண்ணும் செல்வமும் ஆகும். பாபா சீரடியில் இரண்டு நிலையான அமைப்பு முறைகளை ஏற்படுத்தினார். அதாவது தட்சிணையும் அம்மை வசிக்கும் பள்ளிக் கூடமும் என்கிறார் ஹேமத்பந்த். பாபாவைத் தேடி பக்தர்கள் வந்த போதெல்லாம் அவர்களிடம் தட்சிணை கேட்டார். பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னார். பாபாவின் குறிப்பறிந்து ஒவ்வொரு பக்தர்களின் ஆன்மிக நிலையை அளந்து கொள்வார் அம்மை. மேலும், அவர்களுக்கு அன்னமும் படைத்து உபசரிப்பார்.

பக்தர்கள் செல்வம், பெண் என்ற இரண்டு பற்றுக்களிலிருந்தும் விடுபட்டவர்கள் என்று தெளிவுபடுத்தினார்கள் என்றால் அவர்களின் ஆன்மிக முன்னேற்றம் எளிதாகவும் துரிதமாகவும் அமையும்.நானா, மஹல்சாபதி, தீட்சித், ஸாதே என பாபாவின் பக்தர்கள் அனைவரும் அம்மையிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். எம்.பி.ரேகே, வாமன்ராவ் படேல், புரந்தரே, அவஸ்தி ஆகியவர்கள் அம்மையின் குழந்தைகள் என்று அறியப்பட்டனர். இவர்கள் யாவரும் ஆன்மிகத்தில் உயர்நிலையை எய்தியவர்கள்.

எம்.பி.ரேகே தனது குலதெய்வமான நாராயணனை வழிபட்டு வரும் நிலையில், ஒரு நாள், கனவில் நாராயணன் ஒருவரைக் காட்டி “இந்த சீரடி சாயிபாபாவே உமக்குரியவர். நீ அவரை அணுக வேண்டும்’’ என்றார். பின் ஒருமுறை தியானத்தில் ரேகே வானவெளியில் பறந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கிராமத்தை கடந்து செல்லும் போது, ‘இது சீரடி’ என்று அறிகிறார். அங்கே பாபாவை தரிசனம் செய்கிறார். இத்தகைய அற்புதக் காட்சிகள் மூலம் உந்தப்பட்ட ரேகே பாபாவை சீரடியில் தரிசிக்க வருகிறார்.

முதல் சந்திப்பிலேயே பாபா ரேகேவை அம்மையுடன் தங்க அனுப்பினார். எப்பொழுது சீரடிக்கு வந்தாலும் ரேகே அம்மையுடனே தங்கியிருப்பார். அவருக்கு அம்மை, அன்னையாகவும், ரேகே அவருக்கு குழந்தையாகவும் விளங்கினர். இருவருக்கும் `தாயினும் சாலப் பரிந்த’ அன்பு, அளவிட முடியாத அளவு இருந்தது. பாபா எப்பொழுதும் அம்மைக்கு பிரசாதமாக ஒரு ரொட்டியை அனுப்புவார். ரேகே வந்தால் இரண்டு ரொட்டிகள் அனுப்புவார்.

அம்மை தனது நேசம் மற்றும் எல்லாவற்றையுமே பாபாவிற்கே அர்ப்பணித்தவர். அவர் வாழ்ந்தது பாபாவிற்கு மட்டுமே. பாபாவின் தர்பாரை சமஸ்தானமாக்க வேண்டும் என்ற நோக்கமும் அதற்குத் தேவையானவற்றை செய்வதிலும் சந்தோஷம் அடைந்தார் அம்மை. பக்தியைத் தவிரவும் வேறு சில சக்திகளைப் பெற்றிருந்தார் அல்லது பாபா அவருக்குக் கொடுத்திருந்தார் என்று சொல்லலாம். இசையில் ஞானம், நல்ல குரல் வளம், ஆன்மிக சாதனை என பல வகையிலும் உயர்ந்த படிநிலையில் இருந்தார். ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குக் கொடுக்கப்பட்ட சாதனைகளை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மரபு. ‘ஜின்னே கமாயா, உன்னே சுபாயா’ (ஒருவர் தான் பெற்றதை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்) என்பது கபீரின் வாக்கு.

ஜபம்தான் மனோலயம் பெற வழி. என்ன ஜபம் செய்வது? ராம், விட்டல் முதலிய நாமங்களை ஜபத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அம்மைக்கு ‘ஸாயி’ தான் அவருடைய தெய்வம். எனவே, `ஸாயி நாம’த்தை ஜபம் செய்ய எடுத்துக் கொண்டார். ரேகேயும் அந்த நாமத்தை எடுத்துக் கொண்டு இருவரும் தொடர்ந்து ஜபம் செய்து வந்தனர். ஒருநாள் ரேகே பாபாவை தரிசித்த போது, `‘காலையில் என்ன செய்து கொண்டிருந்தாய்?’’ என்று பாபா கேட்டார்.

‘‘ஜபம் செய்து கொண்டிருந்தேன்’’ என்றார் ரேகே
‘‘என்ன நாமா’’
‘‘என்னுடைய தெய்வத்தின் நாமா’’
‘‘எது உன் தெய்வம்’’
‘‘தாங்கள் அறிவீர்கள்’’
‘‘அது சரிதான்’’

இவ்வாறு ஸாயி நாம ஜபம் செய்வதை பாபாவே அங்கீகரித்துவிட்டார். பிரேமையே வடிவான குருவே அந்த பிரத்யட்ச தெய்வம். அந்த குரு தெய்வத்திற்கு தீவிரமாக முழு மனதுடன் பிரேமையுடன் சேவை செய்வதே லட்சியம். பிரேமையே ஸாதனம், ஸாத்தியம் இரண்டுமாகும். இதனால் அம்மை, ரேகே இருவரின் உள்ளங்களிலும் பாபாவின் பிரேமை நன்கு பதிந்து விட்டது. அது மட்டுமன்று, ‘ஸாயி நாம சப்தாஹம்’ என்ற நாம வேள்வியை 1913 ஆம் ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதியில் தொடங்கி ஏழு நாட்கள் நடத்தினார் அம்மை.

“ஓம் ஸாயி நமோ நம:
ஸ்ரீ ஸாயி நமோ நம:
ஜெய ஜெய ஸாயி நமோ நம:
சத்குரு ஸாயி நமோ நம:’’
என்னும் ஸாயி நாம மந்திரத்தை முதன் முதலில் பாபா பக்தர்களுக்கு கொடுத்தவர் அம்மையே என்று “ஸ்ரீ ஸாயிநாத ஸம்ஸ்தானத்தின் அதிதேவதை ஸ்ரீ ராதாகிருஷ்ணமாயி’’ என்னும் தம் நூலில் குறிப்பிடுகிறார் திருவாரூர் பூந்தோட்டம் சாயி சரவணன்.அம்மை தம் அயராத உழைப்பால் சீரடியில் புழுதிபடர்ந்த தெருக்களைக் கூட்டிப் பெருக்கி, பாபா செல்லும் பாதையில், அவரது பாதுகை அணியாத மலர்ப்பாதங்கள் நோகாமல் சுத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்வார். பாபா செல்லும் பாதையில் தான் நடக்கக் கூடாது என்பதற்காக பின் நடையாக நடந்து கூட்டிப் பெருக்குவது அம்மையின் வழக்கம். இது நமக்கெல்லாம் ஒரு படிப்பினையை மிக குறிப்பாக உணர்த்துகிறது எனலாம். அப்படி கூட்டிப் பெருக்கும் அம்மையிடம், ’நீ செய்யும் இந்தப் பணி மிகச் சிறந்தது. எனக்கு மிகவும் பிரியமானது’ என்று ஒருநாள் பாபா சொன்னார்.

ஒருநாள்விட்டு ஒருநாள் பாபா துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு உறங்கச் செல்வார். பாபா தோளில் போர்த்திய சால்வையுடன், பாபாவின் பிரியமான குதிரை ச்யாம் கர்ணாவுடன் ஆரவாரத்துடன் மக்கள் முன்னே செல்ல ஊர்வலமாகப் புறப்படுவார். ஊர்வலம் சாவடியை அடைந்தவுடன் பாபாவிற்கு ஆரத்தி செய்யப்படும். அதன் பின்னர் பாபாவின் படுக்கை தயார் செய்யப்படும்.

இந்த ஊர்வலத்தை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை அம்மைக்கு உண்டு. அந்த ஊர்வலத்திற்கு வேண்டிய ரதம், பல்லக்கு, பட்டாடை, ஆபரணங்கள், கிரீடம், மலர்மாலைகள், வெண்சாமரம், வண்ண அலங்கார விளக்குகள் அத்தனையும் அம்மையால் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்த ஊர்வலத்தின் அலங்காரங்களைப் பார்த்து பாபாவின் சிறந்த பக்தர் கபர்டே, இவ்வித விலையுயர்ந்த வெகுமதிகளை நான் என் சக்தியில் செய்ய இயலாது என்பதைத் தெரிவிக்கிறார்.

ஆனால், அம்மை, ‘சிரத்தா, சபூரி என்ற இரண்டு காசுகளை வைத்துள்ளேன். அவற்றின் தெய்வீக பலத்தினால்தான் எல்லாக் காரியங்களையும் நடத்தி வருகிறேன்’ என்று சொல்வார். பாபாவிற்கு நடக்கும் காலை, மதியம், மாலை, இரவு ஆரத்திக்குத் தேவையான பஞ்ச உபசாரங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதன்படி நடத்தி வந்தவர் அம்மைதான். சீரடி, ‘சீரடி ஸம்ஸ்தான’மாக உருவெடுப்பதற்கு தொடர்ந்து உழைத்து வந்தார். சாமாவிடம் பாபா ‘முற்பிறவிகளில் அம்மை எனக்கு மிகவும் நெருங்கியவள். இது சரீர பந்தத்தை விட மிக உயர்ந்த ஆத்ம பந்தம்’ என்றார்.

‘‘அவதார புருஷன் நடக்கும் இந்த மண்ணானது பக்தர்களால் சேகரிக்கப்பட்டு பூஜிக்கப்படும். துணியில் இருந்து சதாகாலமும் வெளிப்படும் உதி என்னும் விபூதி எங்கும் விநியோகிக்கப்படும். பக்தர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளி, சரீரத்தின் மற்றும் மனத்தின் நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்தும்.

இந்த பாபா வெறும் ஏழை ஃபக்கீர் என்பது நமது அறியாமை. மும்மூர்த்தியும் ஒரு சேர பாபாவின் உருவில் வந்து நிற்கின்றனர். நான்கு வேளைகள் ஆரத்தி பாடி தூப தீபங்களுடன் வந்து மலர்களைத் தூவி அவரைப் போற்றி அடிபணிய வேண்டும். இதற்காக நான் என் உடல், பொருள், ஆவியை அவர் பாதங்களில் அர்ப்பணித்து விட்டேன். அவரே என் புகலிடம். தாய், தந்தை, குரு, தெய்வம், தோழன், பாதுகாக்கும் பதி, பிரபு எல்லாம். எல்லாமே அவர் தான். அவரையன்றி வேறு யாரையும் நான் போற்றி வணங்குவதில்லை. யார் என்ன சொன்னாலும், என் செயல்களைக் குறித்து விமர்சித்தாலும் எனக்கு அக்கறை இல்லை. வாழ்வின் குறிக்கோளான ஸாயி மஹாராஜின் சேவையிலேயே என் வாழ்நாளை கழித்துவிடுவேன்’’ என்று அம்மை அடிக்கடி கூறுவாள்.

“தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும்’’
– என்பது திருப்பாவை ஆண்டாளின் வாக்கு.

ஒருநாள் வாமன்ராவிடம் அம்மை, ‘பக்தர்கள் இப்பொழுது துவாரகாமாயியில் பாபாவிற்கு தர்பூஸ் பழங்களைக் கொடுக்கிறார்கள். நீ போனால் என் பங்கை பாபா கொடுப்பார் என்று கூறி அனுப்பி வைத்தார். அதைப் போலவே பாபா கொடுத்தனுப்பினார். ஒருமுறை அம்மைக்கு பாபா அனுப்பிய சட்னியை வாமன்ராவ் சாப்பிட, வயிற்றுவலி வந்தது. அப்போது பாபா, ‘தனது பங்கை மட்டுமே சாப்பிட வேண்டும்’ என்றார். எது தன்னுடையதோ அதையே உண்ண வேண்டும் என்ற ஆன்மிக குறிப்பு அதில் அடங்கி உள்ளது. பாபாவின் பிரேமையில் திளைத்த அம்மையை வாமன்ராவ் ‘குருரூபிணி’ என்று அழைத்தார்.

இவ்வாறே அம்மை அவஸ்திக்கு குருவாகவும், ரேகேவிற்கு யோகமாயாவாகவும், புரந்தரேவிற்குத் தாயாகவும் அமைந்தார். பாபாவின் பிரேமையை நாம ஜபத்தின் மூலம் பரவச் செய்து ஸாயி பக்திக்கு மகுடம் சூட்டியவர் அம்மை என்று சொன்னால் அது மிகையில்லை.

காரைக்கால் அம்மையாரை நோக்கிச் சிவபெருமான், “இவள் நம்மைப் பேணும் அம்மை காண்’’ என்று அருளிச் செய்ய, அம்மையார் ‘அப்பா’ என்று பெருமான் பாதங்களில் விழுந்து வணங்கினார் என்று சைவ உலகம் போற்றும். அவ்வகையில், பாபாவின் மீது பிரேமை கொண்ட அம்மை ராதாகிருஷ்ணமாயியை, ஒருமுறை பாபா ரேகேயிடம் “அவள் எனக்கும் உனக்கும் தாய்’’ என்று கூறினார் என்றால், அம்மையின் சிறப்பிற்கு இதை விடச் சான்று வேண்டுமோ? கடந்த 26.11.2024 அம்மை ஸ்ரீ ராதாகிருஷ்ணமாயி 108 ஆவது மகாசமாதி தினம் என்பது குறிப்பிடத்தக்கது சாயி சரணம்!

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

 

The post ‘‘அம்மை காண்” appeared first on Dinakaran.

Related Stories: